

கொழும்பு: இலங்கை - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று முன்தினம் இலங்கை அணி பேட் செய்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அந்த அணியின் பேட்ஸ்மேன்களான கமில் மிஷாரா, பிரபாத் ஜெயசூரியா ஆகியோர் நடுவர்களிடம் முறையிட்டனர்.
ஆனால் கள நடுவர்களான அஹ்சன் ரஸா மற்றும் ஷர்ஃபோத் துல்லா சைகத் இருவரும் வெளிச்சத்தின் அளவை கணக்கிட்டு, இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினால் ஆட்டத்தைத் தொடரலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து தொடர்ந்து விளையாடிய பிரபாத் ஜெயசூரியா 2 ரன்களில் மானவ் சுதர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆட்டமிழந்ததும் பிரபாத் ஜெயசூரியா தனது கையுறைகளை ஓய்வறையில் வீசி நடுவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த ஐசிசி, பிரபாத் ஜெயசூரியாவுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.