

கைரோ: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறிய எகிப்து அணி தாயகம் திரும்பியது. அப்போது அந்த அணியின் வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அர்ஜெண்டினா அணி உடனான ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற முன்னிலையில் இருந்து 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது எகிப்து. இந்த ஆட்டத்தில் கள நடுவர் எதிரணிக்கு சாதகமாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை எகிப்பது அணி முன்வைத்தது. இது குறித்து ஃபிபாவிடம் புகார் தெரிவித்துள்ளது எகிப்து அணி.
எகிப்து அணி நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் தாயகம் திரும்பியது. அப்போது தங்கள் நாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் மக்கள். எல் அலமைன் விமான நிலையத்துக்கு வெளியில் எகிப்து அணியின் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஜெர்ஸியை அணிந்திருந்த மக்கள், தங்கள் அணி வீரர்களை நோக்கி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து திறந்தவெளி பேருந்தில் எகிப்து அணியினர் பயணித்தனர். எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தின் கொடியை மக்கள் சுமத்திருந்தனர்.
எகிப்து அணி உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்த தொடரில்தான். ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பெனால்டியில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
‘எங்கள் அணியின் செயல்பாட்டை கண்டு மகிழ்ச்சி கொண்டுள்ளோம்’, ‘இங்கு உற்சாகம் அதிகம் காணப்படுகிறது’ என எகிப்து அணியின் ரசிகர்கள் தெரிவித்தனர்.