

கோப்புப்படம்
கராச்சி: எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியனான இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டுமென வங்கதேச அணி, ஐசிசி-யை முறையிட்டது. அது முடியாத காரணத்தால் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என ஐசிசி அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இப்படி வங்கதேசத்துக்கு ஆதரவாக உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐசிசி கடும் எச்சரிக்கையை அனுப்பியிருந்தது. இவ்வாறு செய்தால் கிரிக்கெட் உலகிலிருந்து பாகிஸ்தான் முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்றும் ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் தங்கள் அணி வீரர்களை பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில், இந்தியா உடன் வரும் 15-ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஐசிசியின் ரியாக்ஷன் என்ன என்பது விரைவில் தெரியவரும்.