

லாகூர்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறாததற்காக, பாகிஸ்தான் அணியின் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ஆமிர் மிர் கூறும்போது, “எந்த வீரருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால், வீரர்கள் சிறப்பாகச் செயல்படும்போது அவர்களுக்கு ஏராளமான ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதால், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு புதிய திட்டத்தை உருவாக்குவது குறித்து வாரியம் ஆலோசித்து வருகிறது.
பாகிஸ்தான் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தற்போது எங்கள் நாட்டு மதிப்பில் சுமார் 6 முதல் 7 கோடி வரை சம்பாதிக்கின்றனர். எனவே அவர்களின் செயல்திறன்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்குவது குறித்து வாரியம் சிந்தித்து வருகிறது. ஆனால் எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றார்.