மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே| FIFA WC - Match Momentum

மெஸ்ஸி, எம்பாப்பே

மெஸ்ஸி, எம்பாப்பே

Updated on
2 min read

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். அவரை பிரான்ஸ் வீரர் எம்பாப்பே பின் தொடர்கிறார். நடப்பு தொடரில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் குரூப் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறுவது யார் என்ற போட்டி அணிகளுக்கு இடையே நிலவுகிறது. இந்த சூழலில் இந்த தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளான அர்ஜெண்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் 2-வது குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின.

அர்ஜெண்டினா vs ஆஸ்திரியா

குரூப்-ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் இந்திய நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 22) இரவு 10.30 மணி அளவில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் 10 நிமிடத்துக்குள் அர்ஜெண்டினா அணி பெனால்டி வாய்ப்பை பெற்றது. இருப்பினும் அதை கோலாக மாற்ற தவறினார் மெஸ்ஸி. அடுத்த 10 நிமிடங்களில் அவர் கோல் பதிவு செய்யும் சூழல் இருந்தது. இருப்பினும் அதை ஆஸ்திரியா வீரர்கள் தடுத்தனர்.

38-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்காக கோல் பதிவு செய்தார் மெஸ்ஸி. சக அணி வீரர் மெடினா, அவருக்கு இதில் உதவி இருந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது மெஸ்ஸியின் நான்காவது கோலாக அமைந்தது. மேலும், இந்த ஒரு கோல் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தின் இறுதியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் பதிவு செய்தார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு அர்ஜெண்டினா முன்னேறி உள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்

ஆஸ்திரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பதிவு செய்த முதல் கோல் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் பதிவு செய்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் சாதனையை மெஸ்ஸி முறியடித்தார். குளோஸ் 16 கோல்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது 18 கோல்களுடன் மெஸ்ஸி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

பிரான்ஸ் vs ஈராக்

குரூப்-ஐ பிரிவில் ஈராக் அணி உடன் பிரான்ஸ் பலப்பரீட்சை மேற்கொண்டது. மோசமான வானிலை காரணமாக இந்த ஆட்டம் தொடர்வதில் சிக்கல் எழுந்தது. இருப்பினும் சற்று தாமதமாக சுமார் 130 நிமிடங்களுக்கு பிறகு இந்த ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தியது. வழக்கம் போலவே எம்பாப்பே, கோல் பதிவு செய்து அசத்தினார். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு முதல் கோலை எம்பாப்பே பதிவு செய்தார். இதன் மூலம் 1-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் உஸ்மான் டெம்பலே கொடுத்த பாஸ் மூலம் மீண்டும் கோல் பதிவு செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் பதிவு செய்த வீரர்களில் அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மொத்தம் 16 கோல்களை உலகக் கோப்பை தொடரில் அவர் இதுவரை பதிவு செய்துள்ளார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களில் 4 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பிரான்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

நார்வே vs செனகல்

குரூப்-ஐ பிரிவில் இடம்பெற்றுள்ள நார்வே மற்றும் செனகல் அணிகள் விளையாடின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் நார்வே வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் நார்வே அணிக்காக பெடர்சன் முதல் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் நார்வே அணி வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் பதிவு செய்தார். அதற்கு மார்ட்​டின் ஒடே​கார்ட் அசிஸ்ட் செய்து உதவினார்.

அடுத்த 5 நிமிடங்களில் செனகல் அணி முதல் கோலை பதிவு செய்தது. இஸ்மாயிலா செனகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். அந்த சூழலில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்தார் ஹாலண்ட். இதன் மூலம் 3-1 என்ற கோல் கணக்கில் நார்வே முன்னிலை பெற்றது. அதன் பின்னர் ஸ்டாப்பேஜ் டைமில் செனகல் அணிக்காக மீண்டும் கோல் பதிவு செய்தார் இஸ்மாயிலா. இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் நார்வே வெற்றி பெற்றது. இதன் மூலம் செனகல் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

<div class="paragraphs"><p>மெஸ்ஸி, எம்பாப்பே</p></div>
லக்னோவில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையத்தில் விபரீதம்: தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in