

புதுடெல்லி: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள சுர்ஜித் சிங் ஹாக்கி மைதானம் மற்றும் மொகாலியில் உள்ள பல்பீர் சிங் சீனியர் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, வங்கதேசம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இதன்படி ஒரு அணி மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். இந்த வகையில் ஒரு அணி 5 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
ஜலந்தரில் லீக் போட்டிகள் அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 முறை சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து இந்திய அணி 29-ம் தேதி சீனாவுடனும், 30-ம் தேதி ஜப்பானுடனும், நவம்பர் 1-ம் தேதி மலேசியாவுடனும், 2-ம் தேதி தென் கொரியாவுடனும் மோதுகிறது. இந்த 5 ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு நடைபெறுகின்றன.