

சென்னை: எம்சிசி-முருகப்பா அகில இந்திய ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே அணி, இந்திய கடற்படை அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.
ரயில்வே அணி தரப்பில் பிரதாப் லக்ரா (39-வது நிமிடம்), அதுல் தீப் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய கடற்படை அணி சார்பில் யோகஷ் சிங் (27-வது நிமிடம்), செல்வராஜ் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட ஷூட்அவுட்டில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியுடன் மோதுகிறது இந்திய கடற்படை அணி.