

ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இன்று (நவ.1-ல்) மீண்டும் மாபெரும் பேரணி நடைபெறும் என இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து இடதுசாரிகளின் மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவர் நேஹா போரா தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், ‘இண்டியா’ கூட்டணியின் பேரணியில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்ஐஆர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.
2023-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்காக, எங்கள் மாணவர் இயக்கம், நவம்பர் 1-ம் தேதி ராம்லீலா மைதானத்துக்கு வரும். வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தின் புனிதத்தைக் காக்கவும் அனைவரும் ராம்லீலா மைதானத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இண்டியா கூட்டணி பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர் அபிஜித் திப்கேவும் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தார். தீபாவளிப் பண்டிகை வரும் நிலையில், டெல்லியின் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தும், ராம்லீலா பேரணியை ஒத்திவைக்க ராகுல் மறுத்து விட்டார்.
இந்தப் பேரணி காரணமாக டெல்லி வியாபாரிகளுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் வியாபாரிகள் சங்கத்தினர் கடிதம் எழுதியும் பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக, கடந்த அக்டோபர் 9-ல் இண்டியா கூட்டணி தலைவர்கள் குடியரசு தலைவரை சந்தித்து முறையிட்டனர். மீண்டும் அவரை சந்திக்க இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.