

இந்திய டி20 அணியில் டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா ஆகிய 3 இடது கை அதிரடி வீரர்கள் இருப்பதால் அவர்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் தானே பந்து வீச முடிவெடுக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரரான தமிழக வீரர் லஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியம் பத்ரிநாத்தின் யூடியூப் சேனலில் எல்.பாலாஜி பேசியபோது, “இந்திய டாப் 3-ல் மூன்று இடதுகை வீரர்கள் இருப்பதால் மார்க்ரம் தானே பந்து வீச்சை தொடங்குவார். இஷான் கிஷன் தவிர மற்ற இருவரும் சமீபத்தில் அதிக ரன்கள் எடுக்காத நிலையில் உள்ளனர். அதனால் ஸ்வீப் ஷாட் அடிக்கவோ, கால்களை பயன்படுத்தி மேலேறி விளையாடவோ தயக்கம் ஏற்படலாம்” என்று கூறினார்.
பத்ரிநாத் இந்த உரையாடலில் கூறும்போது, “இந்திய அணியின் சிறந்த ஸ்பின் ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் களமிறங்குவதால், பவர் பிளே நேரத்தில் ஸ்பின்னை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படலாம்” என்றார்.
இருவரும் அணித் தேர்வு குறித்து விவாதிதத்தில் “நெதர்லாந்து போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், சூப்பர் 8 கட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேலை மீண்டும் சேர்க்க வேண்டும். இது உறுதியான முடிவாகத் தெரியவில்லை. அஷர் படேல் பெரிய போட்டிகளில் பலமுறை சிறப்பாக விளையாடியுள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்” என்றனர்.
இந்தியா தனது மீதமுள்ள சூப்பர் 8 போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை எதிர்கொள்ள உள்ளது.
டீ காக்கை எதிர்நோக்கும் தென் ஆப்பிரிக்கா:
மார்க்ரம் இந்த உலகக் கோப்பையில் பிரமாதமான ஃபார்மில் இருந்தாலும் டி காக் என்னும் கிளாசிக் அதிரடி வீரரைச் சுற்றித்தான் தென் ஆப்பிரிக்கா தன் பேட்டிங் பலத்தை கட்டமைத்து வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 41 பந்துகள்ல் 59 ரன்கள் எடுத்த டி காக், ரியான் ரிக்கிள்டனுடன் இணைந்து 114 ரன்களைச் சேர்த்த அடித்தளத்தில்தான் தென் ஆப்பிரிக்கா பெரிய ஸ்கோரை எட்டியது.
டி காக் மற்றெல்லாரையும் விட டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிகப் போட்டிகளில் விளையாடியவர். 19 டி20 சர்வதேசப் போட்டி அரைசதங்களில் டி காக்கின் 8 அரைசதங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டதே. இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக 6 அரைசதங்கள் எடுத்துள்ளார் டி காக்.
இந்திய அணிக்கு எதிராக பல வடிவங்களிலும் டி காக் சிறப்பாக ஆடியுள்ளதால் இந்திய அணிக்கு எதிரான இந்த உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 போட்டியிலும் டி காக் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறார்.