

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் பாகிஸ்தான் சுழல் வரிசையை நியூஸிலாந்து அதிரடி பேட்டர்கள் எதிர்கொண்டு வெல்வார்களா என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 2022 முதல் ஏப்ரல் 2025 வரை நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மட்டும் 24 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 16 டி20 போட்டிகளில் நியூஸிலாந்து 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
2022-ல் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேஸ் செய்து வென்றது. நியூஸிலாந்து டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் பேட்டிங்கினால் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. ஷாஹின் அஃப்ரீடி 2 விக்கெட், முகமது நவாஸ் 1 விக்கெட்.
4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நியூஸிலாந்து 150+ என்று முடிந்தது. சேசிங் செய்த பாகிஸ்தான் அணியில் இப்போது ஒழிக்கப்பட்ட முகமது ரிஸ்வான் 57 ரன்களையும் இப்போது தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் பாபர் அசாம் 53 ரன்களையும் எடுக்க டார்கெட் சுலபமாக வெற்றியாக மாற்றப்பட்டது.
குரூப் ஸ்டேஜில் நியூஸிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் அதிரடி, காட்டடி தர்பாரில் சிக்கி சின்னாபின்னமானது. அதே போல் பாகிஸ்தான் அணி குரூப் ஸ்டேஜில் இந்திய அணியிடம் சரணடைந்தது, மற்றபடி இரு அணிகளும் ஆப்கான் நீங்கலாக கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆப்கான் அணி தென் ஆப்பிரிக்காவை தண்ணி குடிக்க வைத்தது வேறு கதை.
நியூஸிலாந்தின் பிரச்சனை என்னவெனில் இதுவரை சென்னையிலும் அகமதாபாத்திலும் ஆடி வந்துள்ளனர். இப்போது ஸ்பின் சாதக கொழும்பு பிட்ச். மிட்செல் சாண்ட்னர் மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா திறம்பட வீசினாலும் பகுதி நேர ஸ்பின் பவுலர்களே. இது பாகிஸ்தானுக்குச் சாதகமே, அதுவும் பேப்பரில்தான் பாகிஸ்தான் ஒரு தினத்தில் மோசமாக ஆடுவது என்று முடிவெடுத்து விட்டால் எவரிடம் வேண்டுமானாலும் மடிவார்கள்.
இதுவரை 4 போட்டிகளில் நியூஸிலாந்து 14 விக்கெட்டுகளையே இழந்துள்ளது, ஃபின் ஆலன், டிம் செய்ஃபர்ட், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் எந்த ஸ்பின்னையும் மைதானத்திற்கு வெளியே அடிக்கக் கூடியவர்கள். இருந்தாலும் ஸ்பின் பேக்டு பாகிஸ்தான் அட்டாக்கை இவர்கள் எப்படிக் கையாள்வார்கள் அதுவும் கொழும்புவில் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
ஆனால் மாறாக பாகிஸ்தான் அணி 3 போட்டிகளை இலங்கை ஸ்பின் பிட்ச்களில் ஆடிப் பழக்கப்பட்டுள்ளது. மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடும் அணி வெற்றி பெறும் என்று கூறலாம். இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான இடைவெளி ‘பீல்டிங்’.
நியூஸிலாந்தின் கிளென் பிலிப்ஸ் அவுட்ஸ்டேண்டிங் என்றால் மற்றவர்களும் சிறந்த பீல்டர்களே, பாகிஸ்தான் அணி மோசமான பீல்டிங்கினாலேயே இழந்த போட்டிகள் அதிகம் என்பது நியூஸிக்கும் பாக்கிற்கும் உள்ள பெரிய பிளவு. நியூஸிலாந்து அணியின் ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் இந்தத் தொடரில் 165 என்றால் பாகிஸ்தான் ஸ்ட்ரைக் ரேட் 135 தான்.
இதுவே போட்டியை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றாலும் டி20 உலகக்கோப்பைகளில் நியூஸிலாந்துக்கு எதிரான 7 போட்டிகளில் பாகிஸ்தான் 5-ல் வென்றுள்ளது. ஆகவே ஒரு பிரமாதமான போட்டி காத்திருக்கிறது.