

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த கொல்கத்தா அணி, முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா கேப்டன் ரஹானே 41, ரகுவன்ஷி 45, கிரீன் 32, பவெல் 39 ரன்கள் எடுத்தனர்.
182 ரன்கள் என்ற இலக்கை லக்னோ அணி விரட்டியது. 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து தடுமாறியது அந்த அணி. மார்க்ரம் 22, மார்ஷ் 15, கேப்டன் ரிஷப் பந்த் 10, நிக்கோலஸ் பூரன் 13, அப்துல் சமாத் 2, ஆயுஷ் படோனி 54, ஷமி 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி நான்கு ஓவரில் லக்னோ வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் உடன் இணைந்து அந்த ரன்களை எடுத்தார் முகுல் சவுத்ரி. கடைசி ஓவரில் லக்னோவுக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்தார் ஆவேஷ். அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார் முகுல். 3, 4-வது பந்தில் ரன் சேர்க்க தவறினார். 5-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் பை ரன் மூலம் தனது அணியை வெற்றி பெற செய்தார்.
27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார் முகுல். இதில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார். இந்த சீசனில் இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை முகுல் வென்றார். கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் உடன் அந்த அணி விளையாடிய லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.