

நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 14-வது நாளான நேற்று வில்வித்தையில் மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் கும்கும் அனில் மோஹோத், தென் கொரியாவின் ஓ இஜ்-யினை எதிர்கொண்டார். இந்த போட்டி 5-5 (27-29 29-29 30-29 27-28 30-28) என சமநிலையில் முடிவடைந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க ஷுட் அவுட் நடத்தப்பட்டது.
இதில் கும்கும் அனில் மோஹோத் 10 புள்ளிகள் கொண்ட உள்வட்டத்தை குறிவைத்து தாக்கினார். இதனால் கும்கும் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டு வரலாற்றில் வில்வித்தையில் ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
இதற்கு முன்னர் கடந்த 2010-ம் ஆண்டு குவாங்ஸோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் வெள்ளிப் பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. முன்னதாக கும்கும் அனில் மோஹோத் கால் இறுதியில் நடப்பு உலகச் சாம்பியனான காங் சேயுங்கை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் உலகச் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்க வென்றவரும், முன்னாள் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் ஜிங்கி ஜித்துவை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் கும்கும் அனில் மோஹோத்துக்கு இது 3-வது பதக்கமாக அமைந்தது. அவர், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் அங்கிதா பகத், கிர்த்தி சர்மா ஆகியோருடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ் பொம்மதேவராவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார். தற்போது தங்கப் பதக்கம் வென்றதன் வாயிலாக கும்கும் அனில் மோஹோத் வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.