

இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் மாமனார் ஜெய்சுக் ஜோகி கூறியதாவது: பைலட் ஸ்மித் மச்சாரின் அசாதாரண துணிச்சலை நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
ஒட்டுமொத்த நாடும் எங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மிகப்பெரிய, துணிச்சலான செயலைச் செய்திருப்பதை அங்கீகரித்து, எங்களையும் பலர் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ராணுவ மருத்துவமனையில் ஸ்மித் மச்சாருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்தியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பைலட் ஸ்மித் மச்சாரின் மாமா கிஷோர் மச்சார் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடியுடன் ஸ்மித் உரையாடியதை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு எங்கள் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எல்லா இடங்களிலிருந்தும் அன்பும், ஆதரவும் குவிந்து வருகிறது. முன்பு எங்களை அறிந்திராதவர்கள்கூட இப்போது எங்களை மரியாதையுடன் வாழ்த்துகிறார்கள். அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.
ஸ்மித் மச்சாரின் அத்தை சோனல் மச்சார் கூறும்போது, “ஸ்மித் மிகவும் அமைதியான, மிகவும் நல்ல பையனாக இருந்தார். இப்போது அவர் மிகப்பெரிய துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடியுடன் அவர் பேசுவதைப் பார்த்த பிறகு எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. காணொலியில் அவர் மிகவும் காயமடைந்திருப்பதைப் பார்த்தோம். ஆனால், அவர் விரைவில் நலம் பெறுவார்” என்றார்.
நாட்டுக்கு பெருமை
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பைலட் ஸ்மித் மச்சாரின் உறவினரான புல்கித் மச்சார், பிரபல செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது “அவர் என் உறவினர். அவர் காட்டிய துணிச்சலும், பலரது உயிரைக் காப்பாற்றிய செயலும் எங்கள் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இது எங்கள் குடும்பத்துக்கும் இந்தியாவுக்கு மிகுந்த பெருமிதமான தருணம். அவரது செயல்பாடு அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்” என்றார்.
சல்மான் கான் பாராட்டு
இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை பாராட்டும் வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பிரமாதமாகச் செய்துவிட்டீர்கள் பைலட் ஜி. சூழ்நிலையை நீங்கள் கையாண்ட விதம் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. நாங்கள் அனைவரும் உங்களுக்கு ‘சல்யூட்' செய்கிறோம். உங்களுடன் விமானத்தில் பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வெல் டன் பிரதர்" என குறிப்பிட்டுள்ளார்.