“ஷூ வாங்க பட்டினி கிடந்தார்... தந்தையின் தியாகமே என்னை உயர்த்தியது” - தடகள மங்கை வித்யா ராம்ராஜ் உருக்கம்

“ஷூ வாங்க பட்டினி கிடந்தார்... தந்தையின் தியாகமே என்னை உயர்த்தியது” - தடகள மங்கை வித்யா ராம்ராஜ் உருக்கம்
Updated on: 
3 min read

ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரும் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் இந்​திய தடகள வரலாற்​றில் பொன்​னெழுத்​துக்​களால் பொறிக்​கப்பட வேண்​டிய பல சாதனை​கள் படைக்​கப்​பட்​டுள்​ளன. இதில் குறிப்​பாக, தங்​கம், வெள்​ளி, வெண்​கலம் என மூன்று பதக்​கங்​களைக் குவித்​து, இந்​திய நாட்​டின் பெரு​மையை உலகறியச் செய்த தமிழகத்​தின் நட்​சத்​திர வீராங்​க​னை​யான வித்யா ராம்​ராஜ், தனது அசுர வளர்ச்​சி​யின் பின்​னால் இருக்​கும் கண்​ணீர்க் கதையைப் பகிர்ந்​துள்​ளார்.

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் வித்யா ராம்ராஜ் நிகழ்த்​திய சாதனை சாதா​ரண​மானதல்ல. மகளிருக்​கான 4x400 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யின் இறு​திச்​சுற்​றின் இறு​திப் பகு​தி​யில் அபார​மாக ஓடி தங்​கம் வெல்​லும் இந்​தி​யா​வின் கனவை நனவாக்​கி​னார் வித்​யா. முன்​ன​தாக கலப்பு 4x400 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்​தார். மேலும் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் 54.75 விநாடிகளில் இலக்​கைக் கடந்து வெண்​கலம் வென்​றதுடன், ஜாம்​ப​வான் பி.டி. உஷா​வின் 42 ஆண்​டு​கால தேசிய சாதனையைத் தகர்த்​தெறிந்​தார்.

இந்த இமாலயச் சாதனை​களின் பின்​னணி​யில் லாரி ஓட்​டுந​ரான தனது தந்தை ராம்​ராஜின் தியாகம் நிறைந்த உழைப்பு இருப்​பதை வித்யா நெகிழ்ச்​சி​யுடன் நினைவு கூர்ந்​துள்​ளார். இதுதொடர்​பாக வித்யா கூறும்​போது, “எனது தந்தை சாப்​பி​டா​மல் சேமித்த பணத்​தில்​தான் என் ஸ்பைக் ஷூக்​கள் வாங்​கப்​பட்​டன.

எங்​கள் குடும்​பத்​தின் பொருளா​தா​ரச் சூழல் மிக​வும் கடின​மாக இருந்​தது. லாரி ஓட்​டுந​ரான என் தந்​தைக்கு பெரிய அளவில் வருமானம் கிடை​யாது.

அப்​போதெல்​லாம் ஓடு​வதற்​கான ‘ஸ்​பைக்’ ஷூக்​கள் வாங்​கு​வதே எங்​கள் குடும்​பத்​துக்கு மிகப் பெரிய சவாலாக இருந்​தது. 2009-ம் ஆண்​டு​களில் ஒரு​வேளை உணவின் விலை ரூ.10 முதல் ரூ.40-ஆக இருந்​தது. எனக்கு ஷூ வாங்​கித் தரு​வதற்​காக எனது அப்பா அவரது சாப்​பாட்டை தவிர்ப்​பார்.

மதிய உணவுக்​குப் பதிலாக வெறும் டீ அல்​லது பிஸ்​கட் சாப்​பிட்​டு​விட்​டு, அந்த பணத்தை சேமித்து வைத்து எனக்கு ஸ்பைக் ஷூ வாங்​கித் தரு​வார். நானும் எனது சகோ​தரி​யும் நன்​றாக ஓட வேண்​டும் என்​ப​தற்​காகத் தன் பசி​யைப் பற்​றிக் கவலைப்​ப​டா​மல் அவர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்​சமல்ல” என்று கண் கலங்​கி​னார்.

சிறு வயதில் தந்​தை​யின் இந்​தத் தியாகங்​களின் ஆழம் புரி​யாமல் இருந்த தங்​களுக்​கு, தற்​போது சர்​வ​தேச அரங்​கில் சாதித்த பிறகு​தான் அதன் மதிப்பு முழு​மை​யாகப் புரிந்​திருப்​ப​தாக வித்யா குறிப்​பிட்​டார். “அன்று அவர் பட்​டினி கிடந்து எங்​களை உரு​வாக்​கியது​தான் இன்று எங்​கள் குடும்​பத்​துக்​கு புதிய வெளிச்​சத்தை கொடுத்​துள்​ளது. என் தந்தை செய்ததியாகத்​துக்கு இன்று நாங்​கள் அவருக்​குக் கைமாறாக எங்​களது வெற்​றியைச் சமர்ப்​பிக்​கிறோம்” என்​றார்.

2026 ஆசிய விளை​யாட்​டில் வித்யா ராம்​ராஜ் பெற்ற மூன்று பதக்​கங்​களும் மூன்று வெவ்​வேறு கதைகளைச் சொல்​கின்​றன. வெள்ளி – அணிக்​காக ஓடிய வேகம், வெண்​கலம் – தனிப்​பட்ட போராட்​டத்​தின் வெற்​றி; அதனுடன் தேசிய சாதனை, தங்​கம் – இந்​திய அணி​யுடன் இணைந்து பெற்ற உச்ச வெற்​றி. வித்யா ஓடியது 400 மீட்​டர். ஆனால் அவர் கடந்து வந்த தூரம்​... அதை​விட மிக நீள​மானது, அவருக்கு 28 வயது ஆகிறது.

இந்த வயதில் மின்​னல் வேகத்​தில் சீறிப்​பாய்​வது என்​பது அனை​வ​ராலும் இயலாது. எனினும் சக அணி​யில் உள்ள 32 வயதான பூவம்மா இந்த விஷ​யத்​தில் வித்​யா​வுக்கு பெரிய உந்​துதலாக இருந்​துள்​ளார். இது தடகளத்​தில் சாதிப்​ப​தற்கு வயது ஒரு தடை அல்ல என்​பதை நிருபண​மாக்கி உள்​ளது. பொருளா​தார நெருக்​கடிகள் மற்​றும் எளிய குடும்​பப் பின்​னணி​யைக் கடந்​து, கடின உழைப்​பால் உலக மேடை​யில் இந்​தி​யக் கொடியை உயர்த்​திப் பறக்​க​விட்​டுள்ள வித்யா ராம்​ராஜ், இந்​திய இளைஞர்​களுக்​கும் விளை​யாட்டு வீராங்​க​னை​களுக்​கும் மிகப்​பெரிய முன்​னு​தா​ரண​மாகத்​ தி​கழ்​கிறார்​.

‘பதக்​கத்தை விட நேரமே முக்​கி​யம்’ - ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் வித்​யா​வின் அணுகு​முறை​யில் குறிப்​பிடத்​தக்க விஷ​யம் ஒன்று இருந்​தது. “பதக்​கம் வேண்​டும்” என்​ப​தை​விட “நேரத்தை மேம்​படுத்த வேண்​டும்” என்​ப​தில்​தான் அவரது கவனம் இருந்​தது. ஏனெனில் கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் 400 மீட்​டர் ஓட்​டத்​தில் வித்யா இலக்கை 55.42 விநாடிகளில் எட்டி பி.டி.உஷா​வின் சாதனையை சமன் செய்​திருந்​தார். தற்​போது 54.75 வி​நாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்​துள்​ளார். 3 ஆண்​டு​களுக்​குப் பிறகு தனது நேரத்​தில் 0.67 வி​நாடிகளை குறைத்​தார். 400 மீட்​டர் போன்​ற போட்​டி​யில்​ 0.67 வி​நாடி என்​பது மிகப்​ பெரிய முன்​னேற்​ற​மாக ​பார்​க்​கப்​படுகிறது.

கடந்து வந்த பாதை: பள்​ளிக் காலத்​தில் வித்​யா​வும் அவரது சகோதரி நித்​யா​வும் முதலில் ஹாக்கி விளை​யாட்​டிலேயே ஆர்​வம் காட்​டினர். 7-ம் வகுப்பு படிக்​கும்​போது ஈரோட்​டில் உள்ள விளை​யாட்​டு விடு​தி​யில் சேர்ந்த பிறகே தடகளப் பயிற்​சிக்கு மாறினர். வித்யா ஆரம்​பத்​தில் 100 மீட்​டர் மற்​றும் 200 மீட்​டர் ஓட்​டப் பந்​த​யங்​களில் கவனம் செலுத்தி வந்​தார். 2017-க்​குப் பிறகு 400 மீட்​டர் மற்​றும் 400 மீட்​டர் தடை ஓட்​டம் பிரிவுக்கு மாறி​னார். ஈரோடு கொங்கு கலை அறி​வியல் கல்​லூரி​யின் உடற்​கல்வி இயக்​குநர் முனை​வர் ஏ. சங்​கரின் வழி​காட்​டு​தலிலும், பின்​னர் சென்​னை​யில் பயிற்​சி​யாளர் நேஹ்​பால் சிங் ரத்​தோர் தலை​மை​யிலும் தனது திறமையை வளர்த்​துக் கொண்​டார் வித்​யா.

லாரி ஓட்​டுநரின் மகளாக பிறந்​த​தால், முறை​யான விளை​யாட்டு உடைகள், சத்​தான உணவு மற்​றும் பயிற்​சிக் கட்​ட​ணங்​களைச் சமாளிப்​பது தொடக்​கத்​தில் வித்​யா​வுக்கு பெரும் சவாலாக இருந்​தது. இது ஒரு​புறம் இருக்க தொடர் பயிற்​சிகள், காயங்​கள் மற்​றும் பந்​த​யத்​துக்கு முந்​தைய பதற்​றங்​களைச் சமாளித்து மீண்டு வர பல ஆண்​டு​கள் போராடி​னார். இதன் பலனாக கடந்த 2023-ல் ஆசிய விளை​யாட்​டில் வித்யா 3 பதக்​கங்​களை வென்​றிருந்​தார். அப்​போது அவர், 2 வெள்​ளி, ஒரு வெண்​கலம் கைப்​பற்​றி​னார். தற்​போது தங்​கம், வெள்​ளி, வெண்​கலம்​ வென்​றுள்​ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள பரிசுத் தொகை:

தங்கம்: ரூ.75 லட்சம்

வெள்ளி: ரூ.50 லட்சம்

வெண்கலம்: ரூ.30 லட்சம்

“ஷூ வாங்க பட்டினி கிடந்தார்... தந்தையின் தியாகமே என்னை உயர்த்தியது” - தடகள மங்கை வித்யா ராம்ராஜ் உருக்கம்
தோற்கும் போட்டிகளை ஜெயிக்க வைத்தவர்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 5

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in