

ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயை எதிர்த்து விளையாடினார்.
இதில் 33 வயதான ஸ்ரீகாந்த் 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் ஸ்ரீகாந்த், ஹாங் காங்கின் லீ சியுக் லியுடன் மோதுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா 17-21, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் போராடி உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டோமோகா மியாசாகியிடம் தோல்வி அடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 18-21, 18-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லியு குவாங் ஹெங், ஹ்சு யின் ஹுய் ஜோடியிடம் வீழ்ந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-15, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டோ, தோமா ஜூனியர் போபோவ் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.