

சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: சட்டம் - ஒழுங்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அதன் பிறகு நடந்த விவாதம்:
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: திமுக ஆட்சியில் கொலைகள் எண்ணிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் குறைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020-ல் 1,597 கொலைகள் நடந்த நிலையில், 2021, 2022-ம் ஆண்டுகளில் 1,597 கொலைகள்தான் பதிவாகியுள்ளன.
திமுக கொறடா எ.வ.வேலு: தவெக ஆட்சியில் 116 நாட்களில் அதிக அளவில் குற்றங்கள் நடந்துள்ளதே என்பதுதான் கேள்வி.
குற்றங்களை குறைக்க என்ன செய்தீர்கள் என்று கூறுவதை விடுத்து 2021-ல் அப்படி நடந்தது என எதற்கு ஏலம் விடுகிறீர்கள்?
ஆதவ் அர்ஜுனா: போக்சோ வழக்குகள் 2023-24-ல் 40 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது.
உதயநிதி: எங்கள் ஆட்சியில் போக்சோ குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், அதிக வழக்குகள் பதிவாகின.
அமைச்சர் ராஜ்மோகன்: சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என நீங்கள் கூறுவதுதான் காதுகுத்து. திமுகவில் இருந்த ஜாபர் சாதிக்கிடம் போதைப் பொருள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் குற்றப்பத்திரிகை, அவரது பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் ஆன்லைனில் வெளியாகின.
உதயநிதி: ஓராண்டுக்கு முன்பு எங்கள் ஆட்சியை அதிகமாக பாராட்டிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் இப்போது இடம் மாறியதால் மாற்றிப் பேசுகிறார்.
ராஜ்மோகன்: பட்டிமன்றத்தில் பேசிய என்னை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்துள்ளார் எங்கள் தலைவர்.
ஆதவ் அர்ஜுனா: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், யார் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
உதயநிதி: அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போது உங்கள் கையில் இருக்கிறது. தைரியம் இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு இதை சவாலாக கூறுகிறேன்.
அமைச்சர் ஆனந்த்: பிரச்சாரத்துக்கு எல்லா இடங்களிலும் அனுமதி வழங்கியிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம்.
உதயநிதி: பிரச்சாரத்தின்போது நாங்கள் தவெக பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு கூட்டத்தில்கூட இவர்களை விமர்சிக்கவில்லை. எல்லா கட்சிகளைப் போல, தவெக கூட்டத்துக்கும் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுத்தோம்.
ஆதவ் அர்ஜுனா: எங்களைப் பற்றி பேசாததால் இங்கே இருக்கிறீர்கள். பேசியிருந்தால் வீட்டில் இருந்திருப்பீர்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
‘யாரும் ஓடிவிடாதீர்கள்’
விவாதம் நீண்டுகொண்டே சென்றபோது ஒரு கட்டத்தில் எழுந்த முதல்வர் விஜய், “உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் 7-ம் தேதி பதில் கூறுகிறேன்.
நான் இங்கு இல்லாவிட்டாலும் உங்கள் கேள்விகள் எனக்கு வந்துவிடும். அதற்குரிய பதிலை தருகிறேன். நான் பேசும்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது” என்று கூறிவிட்டு பேரவையைவிட்டு வெளியேறினார்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி, “கடைசியாக யார் ஓடிப்போனார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை சொல்லிவிட்டு முதல்வர் ஓடிவிட்டார். ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே கூறியிருந்தால் பிரச்சினை வந்திருக்காது”என்றார்.