

துபாய்: இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்தியா - ஜப்பான் கிரிக்கெட் அணிகள் இடையே சர்வதேச டி20 போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டி வரும் 22-ம் தேதி தோச்சிஜி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ஜப்பான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டில் கலந்துகொள்ளும் அதே அணியே இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கிரிக்கெட் அணி, ஐசிசி முழுநேர உறுப்பினர் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக சர்வதேச டி 20 போட்டியில் விளையாட உள்ளது இதுவே முதன்முறையாகும். ஐசிசி தரவரிசையில் டி 20 உலக சாம்பியனான இந்திய அணி முதலிடத்திலும், ஜப்பான் 41-வது இடத்திலும் உள்ளன.
ஜப்பான் அணியில் அதிக ரன்கள் சேர்த்துள்ள 30 வயதாகும் கென்டல் கடோவாக்கி ஃபிளெமிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கென்டல் கடோவாக்கி ஃபிளெமிங் 55 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி 1,871 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 139.41 ஆகும். 2 சதங்களும், 12 அரை சதங்களும் அடித்துள்ளார்.
கென்டல் கடோவாக்கி ஃபிளெமிங்குடன் 50-க்கும் மேற்பட்ட டி 20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இப்ராஹிம் தகாஹாஷி, டெக்லான் சுஸுகி மெக்கோம்ப் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட அணியில் விக்கெட் கீப்பராக வட்டாரு மியாவ்ச்சி உள்ளார். லெக் ஸ்பின்னராக மகோடோ தனியாமா இடம் பெற்றுள்ளார். ஜப்பான் அணிக்காக இவர், அதிக விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
ஜப்பான் அணி விவரம்:
கென்டல் கடோவாக்கி ஃபிளெமிங் (கேப்டன்), சார்லி ஹரா ஹின்ஸ், பெஞ்சமின் இடோ டேவிஸ், அலெஸ்டர் கடோவாக்கி ஃபிளெமிங், கோஹெய் குபோடா, ஜேக் குசுடா நாயர்ன், வட்டாரு மியாவ்ச்சி, ரியோ சகுரானோ தாமஸ், அலெக்ஸ் ஷிராய் பட்மோர், ஷோமா சுகாயா ஸ்லேட்டர், டெக்லான் சுஸுகி மெக்கோம்ப், சுயோஷி தகடா, இப்ராஹிம் தகாஹாஷி, மகோடோ தனியாமா, லச்லான் யமமோட்டோ லேக்.