

மதுரை: ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தை செப்.15-ம் தேதிக்குப் பதில், செப்.25-ம் தேதி உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தவெக அறிவித்திருந்தது.
அதன்படி, ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், செப். 25-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாய் மாமன் சீர் வழங்கும் வழக்கம் உசிலம்பட்டி பகுதியில் மிகப் பிரபலம் என்பதால் அங்கு இத்திட்டத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்று முதல்வர் விஜய் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் பாரம்பரிய தாய்மாமன் சீர் முறையை அரசு வழங்கும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
செப். 17-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் பெயரிலான காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க போகிறார் என்ற தகவல் உள்ளது. அதே நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடப்பதால், அதிலும் முதல்வர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2 விழாக்கள் இருப்பதால் தங்க மோதிர திட்டத்தைச் செப். 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து அன்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அதற்காக மாவட்டநிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து உசிலம்பட்டி மருத்துவமனையில் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜூன் 22-ம் தேதி முதல் தற்போது வரை 6,500 குழந்தைகளுக்கு வழங்க இந்த திட்டத்தில் தங்க மோதிரங்களைத் தயார் நிலையில் வைத்துள்ளோம். உசிலம்பட்டியில் மட்டும் 1,500 பேருக்குத் தங்க மோதிரங்கள் வழங்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரி கூறினார்.