பேட்டிங் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா மடித்தது எப்படி?

பேட்டிங் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா மடித்தது எப்படி?
Updated on: 
3 min read

முன்னால் போர்ட் எலிசெபத் இந்நாள் கெபெர்ஹா மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் பலவீனங்களையும் அம்பலப்படுத்திய தென் ஆப்பிரிக்கா, மிகப் பெரிய வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-வது முறையாக ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் ஆடப் பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4-ம் நாளான நேற்று ஆஸ்திரேலியா அணி தன் முதல் இன்னிங்ஸில் 3/1 என்று தொடங்கி 99 ரன்களுக்குச் சுருண்டது. மார்க்கோ யான்சென் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டதில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஸ்மித் காயமடைந்து இருப்பதால் அவர் இறங்குவதிலும் சந்தேகமாகியுள்ள நிலையில் மிகப் பெரிய இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராடி வருகிறது. டிராவிஸ் ஹெட்டுக்கு கேட்ச்சை விட்டு வாழ்வு கொடுத்த நிலையில் 87 ரன்களுடனும் ஸ்காட் போலண்ட் 2 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இரண்டு நாட்கள் ஏறக்குறைய முழு மழைக்குப் பிறகு இந்த அற்புதமான வெற்றி கொடுக்கும் மீட்டெழுச்சிக்கு உலகின் சிறந்த டெஸ்ட் கேப்டன் தெம்பா பவுமாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் மிகப் பெரிய காரணம்.

92/5, பிறகு 110/6 என்ற நிலையிலிருந்து யான்சென் (85), பிறகு ஹார்மர் (82) ஆகியோருடன் சாதனைக் கூட்டணி அமைத்து 179 ரன்களை குவித்த தெம்பா பவுமா உண்மையில் இந்த டெஸ்ட்டின் தென் ஆப்பிரிக்க திருப்பு முனை இன்னிங்ஸை ஆடினார் என்பதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸ்களில் தன் பெயரையும் பதிவு செய்துள்ளார் பவுமா.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன் 5 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை சிதைத்தார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் முதல் இன்னிங்ஸில் 100 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு துணையாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய காகிசோ ரபாடா 2/33, ஆல்ரவுண்டர் வியான் முல்டர் 2/14 என சிறப்பாகப் பந்துவீசினர்.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவன் ஸ்மித் 28 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. நிக் மேடின்சன் உள்ளிட்ட ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பதிவு செய்த நான்காவது குறைந்தபட்ச ஸ்கோர் (99) இதுவாகும்.

மேலும், 2023-ல் நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 91 ரன்களுக்கு ஆட்டமிழந்ததற்குப் பிறகு, 69 இன்னிங்ஸ்களுக்குப் பின்னர் முதல்முறையாக ஆஸ்திரேலியா 100 ரன்களுக்குக் கீழ் ஆல்-அவுட் ஆகியுள்ளது.

இந்த இன்னிங்ஸில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஸ்டீவன் ஸ்மித் 11,000 டெஸ்ட் ரன்களை கடந்த 12-வது வீரராகவும், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலியராகவும் ஆனார். அவருக்கு முன்னதாக ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் வழக்கமான நான்காவது வரிசையில் ஸ்மித் களமிறங்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே யான்சன் ஸ்காட் போலண்டை ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின்னர் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார். முதல் அரை மணி நேரத்திலேயே ஆஸ்திரேலியா 22/3 எனத் தடுமாறியது.

மார்னஸ் லபுஷேன் தொடக்கத்தில் ஜான்சனின் பந்துகளை மிட்-ஆஃப் வழியாக இரண்டு முறை பவுண்டரிக்கு விரட்டினாலும், பின்னர் நார்க்கியே வீசிய பந்தில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். அந்த கேட்சை ஹார்மர் அசத்தலாக ஒரு கையால் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிர்ச்சி அளித்தார்.

45/4 என்ற நிலையில் இருந்தபோது தென்னாப்பிரிக்காவுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்க்கியே காயம் காரணமாக ஓவருக்கு நடுவிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத அவர், டர்பன் டெஸ்டில் 40 ஓவர்கள் வீசியிருந்தார். இப்போட்டியிலும் அவரது வேகத்தைப் பயன்படுத்த தென்னாப்பிரிக்கா முடிவு செய்திருந்த நிலையில், இந்தக் காயம் அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மித் மற்றும் மேட் ரென்ஷா இணைந்து இன்னிங்ஸை நிலைநிறுத்த முயன்றனர். ஆனால் மீண்டும் பந்துவீச வந்த ரபாடா ஸ்மித்தைத் தடுமாறச் செய்தார். கழுத்தில் வலி ஏற்பட்டதால் ஸ்மித் சிகிச்சையும் பெற்றார்.

பின்னர் ரென்ஷா யான்சனின் பந்தை எட்ஜ் செய்து ஹார்மரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் அலெக்ஸ் கேரியும் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 69/6 என்ற மோசமான நிலையில் இருந்தது.

இரண்டாவது செஷனில் பியூ வெப்ஸ்டர் முதலில் தப்பித்தாலும், பின்னர் யான்சனின் கூடுதல் பவுன்ஸில் சிக்கினார். ஸ்மித் 11,000 டெஸ்ட் ரன்களை எட்டியபோதும், அவரது கழுத்துவலி தொடர்ந்து தொந்தரவு செய்தது. முல்டர் வீசிய பந்து ஸ்மித்தின் பேட்டைத் தாண்டி உள்ளே புகுந்து அவரை போல்டாக்கியது.

அதன்பின் மிட்செல் ஸ்டார்க், ரபாடாவின் பந்தில் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சொந்த மண்ணில் ரபாடா தனது 200-வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார். கடைசியாக பேட் கம்மின்ஸை முல்டர் ஆட்டமிழக்கச் செய்ய, ஆஸ்திரேலியா 99 ரன்களுக்கு சுருண்டது.

326 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை ஃபாலோ-ஆன் செய்ய வைத்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 156/4 என இருந்தது. இருப்பினும், இன்னும் 170 ரன்கள் பின்தங்கியுள்ளதால், தென்னாப்பிரிக்கா வெற்றிக்கான வலுவான நிலையில் உள்ளது.

மொத்தத்தில் நான்காம் நாள் ஆட்டத்தில் 13 விக்கெட்டுகள் வீழ்ந்தன. தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் வெற்றியை நோக்கி நகரும் வகையில் ஐந்தாம் நாளான 98 ஓவர்களும் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியா 170 ரன்கள் பின் தங்கியுள்ளது. மீதமுள்ள 6 விக்கெட்டுகளை எடுக்க தென் ஆப்பிரிக்கா இன்று கடும் முனைப்பு காட்டும். குறைந்த பட்சம் இன்னிங்ஸ் தோல்வியையாவது தவிர்க்க ஆஸ்திரேலியா போராடும்.

பேட்டிங் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா மடித்தது எப்படி?
‘மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்’ - பிரான்ஸ் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in