‘மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்’ - பிரான்ஸ்வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

பிரான்சில் நிகழ்ந்த வன்முறை

பிரான்சில் நிகழ்ந்த வன்முறை

Updated on: 
1 min read

பாரிஸ்: பிரான்சில் தற்போது நிலவும் சூழல் காரணமாகவும், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்தியர்களை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரான்சில் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து, தலைநகர் பாரிசின் சில பகுதிகள், லில்லி, லியோன், நைஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மார்சேய் நகரிலும் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் போராட்டங்களை நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசுக்கு எதிரான குழுக்கள் அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றன. பிரான்சின் முதன்மை மாணவர் சங்கம் மற்றும் மஞ்சள் சீருடை இயக்கம் ஆகியவை, வரும் 14 (சனிக்கிழமை) பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போராட்டங்களின்போது வன்முறை நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.

பிரான்சில் நிலைமை இன்னும் சீரடையாததை கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பிரான்சில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிரான்சுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், ‘பிரான்சின் தற்போதைய சூழல் மற்றும் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

போராட்டங்கள் நடைபெறும் இடங்கள், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகள் ஆகியவற்றை தவிர்க்கவும். உள்ளூர் பிரஞ்சு அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

உள்ளூர் செய்திகள் மூலம் சூழலை தொடர்ந்து அறிந்து கொள்ளுங்கள். பொது போக்குவரத்து சேவைகளில் பாதிப்புகள் ஏதும் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், இந்தியர்கள் பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தை +33 6 48 34 00 63 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது cons.paris@mea.gov.in என்ற மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும், மார்சேய் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை +33 7 43 16 25 59 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது cgo.marseille@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் போதிய நிதி இல்லாமை, மாணவர் நெரிசல் போன்ற காரணங்களுக்காக கடந்த செப்டம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டம், விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகளின் குறைபாடுகளுக்கு எதிரானதாகவும் மாறியது. கடந்த 17ம் தேதி இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும், பல்வேறு வணிக நிறுவனங்களில் பொருட்கள் சூரையாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>பிரான்சில் நிகழ்ந்த வன்முறை</p></div>
போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட தேசியக் கொடி புகைப்படம்: அகற்ற மறுத்த பிரியங்கா மகன் ரெஹான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in