

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் குவித்து சதமடித்திருந்தாலும், அவரது இடத்தை உறுதி செய்யாமல் அதிர்ச்சி நீக்கம் செய்துள்ளது கம்பீர் - கில் அண்ட் கோ.
வெறும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால், இரண்டு சதங்கள் அடித்திருந்தாலும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை காரணமாக அவர் இந்த முறை வாய்ப்பை இழந்துள்ளார் என்று காரணம் கூறப்படுகிறது.
மூன்று வடிவத்திற்கான வீரர்களையெல்லாம் இப்படி வடிகட்டி வடிகட்டி அவர்கள் தாங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற குழப்பத்தை தொடர்ந்து இந்திய அணித்தேர்வுக்குழு செய்து வருகிறது. ரிஷப் பந்த் காலியானார், இப்போது ஜெய்ஸ்வால்.
தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியிருந்த விராட் கோலி, உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் மீண்டும் அணியில் இணையவுள்ளார். இதற்காக அவர் அடுத்த வாரம் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையத்தில் உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ள உள்ளார்.
2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு தயாராகி வரும் இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்காக முழு பலம் கொண்ட அணியை அறிவித்துள்ளது. காயம் மற்றும் பணிச்சுமை மேலாண்மை காரணமாக நீண்ட நாட்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பும்ராவின் வருகையால் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அக்சர் பட்டேலுக்காக இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபே நீக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரில் இருவரும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியிருந்த ஹர்திக் பாண்டியாவும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் கம்பீரின் செல்லப்பிள்ளை ஹர்ஷித் ராணா மீண்டும் இடம்பெற்றுள்ளார். தேவையில்லாமல் நிதிஷ் குமார் ரெட்டியை அணியில் எடுத்துள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் ஜூலை 14-ஆம் தேதி பர்மிங்காம், ஜூலை 16-ஆம் தேதி கார்டிஃப் மற்றும் ஜூலை 19-ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகின்றன.
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி (உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டு), ஸ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார்.