

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 9 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய 7-வது போட்டி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தத் தொடர் முழுவதும் அந்த அணி நிலைத்தன்மை இல்லாத அணியாகவே இருந்து வருகிறது. வீரர் தேர்வுகள், பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அணியின் சீரான ஆட்டத்தை வெகுவாகப் பாதித்திருந்தது.
முதல் 6 ஆட்டங்களில் வெற்றி பெறாத கொல்கத்தா அணி அதன் பின்னர் மீண்டு வந்து தொடர்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டது. ஆனால் கடைசியாக ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான ஃபீல்டிங் மற்றும் விராட் கோலியின் அபாரமான பேட்டிங் காரணமாக தோல்வி அடைய நேரிட்டது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இது நிகழ்ந்தாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஏனெனில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே கொல்கத்தா அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும். ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக களமிறங்கவில்லை.
வருண் சக்ரவர்த்தி இல்லாதது அணியின் பந்துவீச்சில் எதிரொலித்தது. இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் அங்ரிஷ் ரகுவன்ஷி 4 அரை சதங்களுடன் 340 ரன்கள் சேர்த்துள்ளார். இதேபோன்று ரிங்கு சிங் 148.95 ஸ்டிரைக் ரேட்டில் 2 அரை சதங்களுடன் 286 ரன்கள் எடுத்துள்ளார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் முழுமை பெற்ற அணிகளில் ஒன்றாகக் காட்சியளிக்கிறது.
தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அந்த அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 8 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும். குஜராத் டைட்டன்ஸ் அணியின் எழுச்சிக்கு, சரியான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்ட அவர்களது பந்துவீச்சு கூட்டணியே முக்கிய காரணம்.
இந்த வெற்றிப் பயணத்தின் போது காகிசோ ரபாடா 2 முறை ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். ஜேசன் ஹோல்டரும் தனது பங்குக்கு 2 விருதுகளை வென்றுள்ளார். அதே நேரத்தில், ரஷித் கான் தனது பழைய மாயாஜால பந்துவீச்சை மீட்டெடுத்துள்ளதும் பலம் சேர்த்துள்ளது. பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் வலுவாக உள்ளனர். இதில் சாய் சுதர்சன் நடப்பு சீசனில் 501 ரன்களை குவித்துள்ளார்.
நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசனை விட வெறும் 7 ரன்கள் மட்டுமே சாய் சுதர்சன் பின்தங்கியுள்ளார். தனது கடைசி ஆறு இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட ஐந்து அரைசதங்களை விளாசியுள்ள சாய் சுதர்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். ஷுப்மன் கில்லும் சிறந்த ஃபார்மில் உள்ளார். நடுவரிசையில் வாஷிங்டன் சுந்தர் தனது அதிரடியால் பலம் சேர்த்து வருகிறார். இவர்களுடன் ஜாஸ் பட்லரும் மட்டையை சுழற்றத் தொடங்கினால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும்.