

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அண்மையில் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் நாம் கடினமான காலத்தை எதிர்கொள்ள வேண்டும். குடிமக்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச பொருளாதார கொந்தளிப்புகளில் இருந்து உலக நாடுகள் எதுவும் தப்பிக்க முடியாது என்றபோது சிங்கப்பூர் போன்ற சிறிய தீவு தேசம் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் இந்தக் கடின காலத்தை கடந்து செல்லக் கூடிய வகையிலான திட்டங்களும், திறனும் அரசிடம் இருக்கிறது. ஒன்றாக மீண்டெழுவோம.” என்று கூறியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதனை முன்னரே பேசிவிட்டார். “பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உலக அளவில் உயர்ந்துள்ளது. இத்தகையச் சூழலில் அவற்றை வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் - டீசலை சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நமது பொறுப்பு. இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும். அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தேசபக்திக்கு சிறந்தவொரு பங்களிப்பாக இருக்கும். குடும்பங்களின் ஆரோக்கிய ரீதியாவும், தேசத்துக்கு பொருளாதார ரீதியாகவும் நலன் சேர்க்கும்” என்று கூறியிருந்தார்.
இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆசியப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்களிப்பை செலுத்துகின்றன. இந்நிலையில், அந்நாட்டுத் தலைவர்களின் எச்சரிக்கை மணி நாம் எல்லோரும் கடின காலத்துக்கு தயாராகத்தான் வேண்டுமா என்ற அச்சத்தைக் கடத்துவதாகவே அமைந்துள்ளன.
மே 15, 2026 நிலவரப்படி, சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை (Brent Crude) பீப்பாய்க்கு சுமார் 106 டாலர் முதல் 109 டாலர் வரை வர்த்தகமாகிறது. இந்திய ரூபாயில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.8,300-ஐ கடந்து விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இன்று விலையேற்றமும் நிகழந்துள்ளது.
இத்தகைய சூழலில் இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் 2026-ல் 8.3%- ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த இந்த விகிதம், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்திருப்பது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில்தான் பெட்ரோல், டீசல் விலையும் இந்தியாவில் உயர்ந்துள்ளது.
யாருக்கெல்லாம் மிகுந்த பாதிப்பு?
எரிபொருள் விலையுயர்வு எப்போதுமே பல துறைகளிலும் அதிர்வலைகளை கடத்தக் கூடியாதகவே இருக்கிறது. நாட்டின் பணவீக்கம் எகிறியுள்ள இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஒருமுறை ஏற்றமா அல்லது தொடர் ஏற்றத்தின் தொடக்கமா என்பதுதான் இந்த ‘ஷாக் வேவ் எஃப்கெட்’ எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நிர்ணயிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
எரிபொருள் விலையேற்றம் எப்போது நடந்தாலும் FMCG (Fast-Moving Consumer Goods ) எனப்படும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் மீதே உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மக்கள் அதிகம் அடிக்கடி நுகரும் உணவுப் பொருட்கள் விலை உயரும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
ஒரு விரைவுப் பட்டியலை தயார் செய்தால், பெட்ரோல் விலையேற்றத்தால் டூவிலர், கார் பயன்படுத்துவோர் எரிபொருள் செலவு அதிகரிக்கும். டீசல் விலை உயர்வு பொதுமக்களின் பேருந்து போக்குவரத்து, ஆட்டோ, வாடகை கேப், சரக்கு வாகன சேவைகள் செலவை அதிகரிக்கும். ஏறிய விலை இன்னும் ஏறினாலோ அல்லது அதே நிலை நீடித்தாலும் கூட பாதிப்புகள் சாமானியர்களை அதிகம் பதம் பார்க்கப் போவது உறுதி என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
சரக்கு வாகனக் கட்டணங்கள் கூடும்போது பால், காய்கறி, இறைச்சி, மளிகைப் பொருட்கள் விலையும் அதிகரிக்கும்.
இந்தியாவில் ஏற்கெனவே அமுல், மதர் டெய்ரி போன்ற பால் நிறுவனங்கள் எரிபொருள், போக்குவரத்து விலையேற்றத்தைக் குறிப்பிட்டு பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், “பொருட்கள் விலையேற்றம் என்பது கள யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நுகர்வோர் அதற்கு தங்களை தகவமைக்க மாட்டார்கள். இதனால் பிற்காலத்தில் பற்றாக்குறை, நிதிச் சிக்கல் ஏற்படும். அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எதிரொலிக்கத் தொடங்கும்” என்றும் சிலர் விவாதிக்கின்றனர்.
எரிபொருள் விலையேற்றமானது, கிராமப்புறங்களின் இன்னும் கூரான தாக்கமாக இறங்கும். ஏனெனில் விவசாயிகள் டீசல் டிராக்டர் வாகனங்கள், நீரேற்று இயந்திரங்கள், வேளாண் சரக்கு வாகனங்களை அதிகம் சார்ந்துள்ளதால், வேளாண் உற்பத்திச் செலவு அதிகரித்து அது உணவுப் பொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பணவீக்கத்தில் என்ன மாதிரியான தாக்கம்?
பெட்ரோலும் டீசலும் நமது நுகர்வோர் விலைக் குறையீட்டில் (Consumer Price Index - CPI) 5% மதிப்பைக் கொண்டுள்ளது. இப்போது இந்த எரிபொருள்களின் விலை கிட்டத்தட்ட ரூ.3 ஏற்றம் என்று கொண்டாலும் எரிபொருள் விலையில் 3% உயர்வு என்று அர்த்தம். அப்படியென்றால் CPI-ல் இதன் தாக்கம் 0.15% என்றளவுக்கு இருக்கும். இத்துடன், ஏற்கெனவே உயர்த்தப்பட்ட எல்பிஜி, சிஎன்ஜி விலையையும் சேர்த்தால் இனி வரும் நாட்களில் பணவீக்கத்தில் மேல்நோக்கிய அழுத்தமே இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு மணி நேர குறுகிய பயணமாகச் சென்ற பிரதமர் மோடி, பெட்ரோலிய இருப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எல்பிஜி விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
என்ன நினைக்கிறார்கள் நுகர்வோர்?!
எரிபொருள் விலையேற்றத்தால் பல்வேறு விளைவுகளையும், எதிர்காலத்தில் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ள நிலையில், நுகர்வோரின் கருத்துகளும் முக்கியமானவை.
டெல்லியைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “பெட்ரோல், டீசல் விலையுயர்வு, பணவீக்கம் உயர்வு எல்லாம் நிச்சயமாக என்னைப் போன்ற சாமானியர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதைக்கு அரசு ஓரளவு எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருந்தாலும் என்னைப் போன்றோருக்கு சிறிய ஏற்றமே பெரிய பாதிப்புதான். இந்த விலையேற்றம் இத்துடன் நிற்குமா அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை என்று ஏறுமா என்று கலக்கமாக இருக்கிறது,” என்றார்.
இன்னொரு நபர், “ஆங்காங்கே போர்கள் நடக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் கொள்முதலும் அரசுக்கு சிக்கலாக இருக்கிறது. இந்த நேரத்தில் பிரச்சினையின் ஆணிவேரையும் சேர்த்து பரந்த பார்வையோடு அணுக வேண்டும். நிலையை உணர்ந்து அரசு தீவிர பரிசீலனைக்குப் பின்னரே இந்த விலையேற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அரசை ஆதரிக்கிறேன்,” என்றார்.
கடினமா, கடக்கக் கூடியதா? - நிபுணர்கள் கருத்து
எரிபொருள் விலையேற்ற அறிவிப்புக்கு முன்னரே சிக்கன நடவடிக்கையாக பிரதமர், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. டெல்லி முதல்வர் அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள் ஒர்க் ஃப்ரம் ஹோம் அறிவித்தார். பிஹார் முதல்வர் அலுவலகத்துக்கு நடந்தே சென்றுள்ளார்.
இந்தப் பின்னணியில் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழல் குறித்தும், அதன் நீட்சியாக சாமானியர்கள் மத்தியில் உருவாகியுள்ள கலக்கம் குறித்தும் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசனிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் ஏறும். இதனால் விலைவாசி உயரும். குறிப்பாக அன்றாடம் உபயோகிக்கக் கூடிய பொருட்களின் விலை ஏறும். இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96 என கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த விலையேற்றம் வீடுகள்தோறும் எதிரொலிக்கும்.
ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதிய உயர்வு தர இயலாது சூழல்கள் வரும். ஆனால், அதேவேளையில் விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கும். இது ஏழை, நடுத்தரக் குடும்பங்களை வெகுவாக பாதிக்கும். கல்விக்கான செலவு, மருத்துவ செலவு போன்றவற்றை சமாளிக்க கூடுதல் சிரமம் உருவாகும்.
மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி நகை வாங்கி சேர்த்து வைத்துள்ள அப்பர் மிடில் கிளாஸ், பணக்காரர்களுக்கு சகாயம் செய்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சாமானியர்களை சங்கடப்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சாமானியர்கள் பரவலாகப் பயனடையும் வகையில் குறைக்கவில்லை. தங்கள் நண்பர்களான பெரும் முதலாளிகள் பலனடையும் வகையில் கார்ப்பரேட் வரிச் சலுகைகளை தந்தவர்கள், இன்று பெட்ரோல் மீதான மத்திய, மாநில அரசு வரிகளைக் குறைத்துக் கொண்டு சாமானியர்கள் மீதான சுமையை ஏன் குறைக்கக் கூடாது.
எரிபொருள் சிக்கனத்தை பேசும் பிரதமர் பஹ்ரைன் பயணத்துக்கு பதிலாக ஆன்லைனிலேயே ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கலாமே.
பல மாநிலங்களில் நடந்த தேர்தலுக்கு முன்னரே, ராகுல் காந்தி பெட்ரோல் - டீசல் விலை ஏறும் என்றார். ஆனால் அப்போது அதை மறுத்த பிரதமர் மோடி, இப்போது விலையேற்றம் செய்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் சொல்வதற்கு முன்னரே கடின காலத்தை ராகுல் காந்தி கணித்தார்.
இப்போதே யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் தங்களின் பொருட்களின் விலையை ஏற்றியுள்ளனர். இது இனியும் தொடரும். பாமாயில் விலை ஏறும். மக்கள் கடுகு எண்ணெய்க்கு மாறும் நிலை கூட வரும்.ரூபாய் மதிப்பு சரிந்துள்ள, பெட்ரோல், டீசல் விலை ஏறியுள்ள இந்தச் சூழலில் நாம் நிச்சயமாக கடினமான காலத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு உபயோகிப்பாளர்கள் பாதுகாப்புக் குழு செயலாளர் எஸ்.புஷ்பவனம் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலையுயர்வு என்பது போர்ச் சூழலால் உருவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. உலகளவில் இதன் தாக்கம் உள்ளது. இருந்தாலும் இது தற்காலிகமான நெருக்கடி.
நாம் ஒவ்வொருவருமே நம் வீட்டளவில் மின்சார சிக்கனம் கடைப்பிடிப்பதுபோல், எரிபொருள் சிக்கனத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
மேலும், முன்பு இருந்ததுபோல் அல்லாமல் இப்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ரேஷன் அட்டை தாரர்களுக்கு உதவித் தொகை வருகிறது. மாதாந்திர உரிமைத் தொகையை பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை சமாளிக்க பயன்படுத்தலாம்.
இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதே சரியானதாக இருக்கும். இது நிச்சயமாக 3, 4 மாதங்களில் மாறிவிடும்” என்றார்.