

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி சொந்த மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்த சீசனில் முதலில் பேட் செய்தால் 200 ரன்களுக்கு மேல் வேட்டையாடுவதை குறிவைத்து செயல்படும் ஆர்சிபி அணியால் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அந்த ஆட்டத்தில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், கேப்டன் ரஜத் பட்டிதார், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. தொடக்க வீரரான பில் சால்ட் மட்டுமே 63 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை மீண்டும் அதிரடி பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி 100 ரன்களுக்கு சுருண்டிருந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சியில் குஜராத் அணி கவனம் செலுத்தக்கூடும்.
ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகியோர் ஓரளவுக்கு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ராகுல் டெவாட்டியா, ஷாருக்கான் போன்ற வீரர்களிடம் இருந்து அணியின் வெற்றிக்குத் தேவையான இன்னிங்ஸ்களோ அல்லது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய அதிரடியான ஆட்டமோ வெளிப்படவில்லை.
இவர்கள் பார்முக்கு திரும்பினால் அணியின் பலம் அதிகரிக்கும். பிரசித் கிருஷ்ணா, காகிசோ ரபாடா, முகமது சிராஜ், ரஷீத் கான் ஆகியோரை உள்ளடக்கிய பந்துவீச்சு துறை ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.