

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: பதவி மீது எனக்கு விருப்பம் இல்லை. மத்தியில் உள்ள பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே குறிக்கோள்.
அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியால் மேற்குவங்கத்தில் ஏராளமானோர் வாக்குரிமையை இழந்துள்ளனர். இந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிக்காவிட்டால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும். இதன்காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது.
பிரதமர் மோடி மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறார். ஆனால் பிரதமரின் முயற்சிகள் வெற்றி பெறாது. மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.