

கொல்கத்தா: ஐபிஎல் 2026 தொடரின் 65-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய கார்பின் போஷ் 18 பந்துகளில் 32 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலா 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் சவுரப் துபே, கேமரூன் கிரீன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். சுனில் நரேன் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, தொடக்கத்திலேயே ஃபின் ஆலன் (8) விக்கெட்டை இழந்தாலும், மனிஷ் பாண்டே மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டது. மனிஷ் பாண்டே 33 பந்துகளில் 45 ரன்களும், ரோவ்மன் பவல் 30 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
கேப்டன் ரஹானே 21 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவர்களில் ரிங்கு சிங் (9) மற்றும் தேஜஸ்வி தஹியா (11) ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 13 புள்ளிகளுடன் தங்களது பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.