

முல்லன்பூர்: ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. அணியின்இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலாக விளையாடி 47 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் (440 பந்துகள்) 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற ஆண்ட்ரே ரஸலின் உலக சாதனையை அவர் முறியடித்தார். இறுதி ஓவர்களில் டொனாவன் ஃபெரீரா வெறும் 11 பந்துகளில் 38 ரன்கள் எடுத்துப் பலம் சேர்த்தார். குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து 215 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி 53 பந்துகளில் தனது 5-வது ஐபிஎல் சதத்தை (104 ரன்கள்) பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த தொடக்க வீரர் சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடியின் அதிரடியால் குஜராத் அணி 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இது ஐபிஎல் பிளே-ஆஃப் வரலாற்றிலேயே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன் இலக்காகும். இந்த அபார வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது.