

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 19-வது சீசன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, தலா 5 முறை பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், 3 முறை கோப்பையை கைப்பற்றி உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தலா ஒரு முறை வாகை சூடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இதுவரை பட்டம் வெல்லாத டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் களமிறங்குகின்றன.
தொடக்க நாளான இன்று நடப்பு சாம்பியனான ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளுமே இம்முறை பந்துவீச்சுதுறையில் சற்று பலவீனமாக உள்ளன. முக்கிய வீரர்கள் இல்லாதது இரு அணிகளுக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆர்சிபி அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், தொடக்க போட்டிகளில் களமிறங்குவது சந்தேகம்தான்.அதேவேளையில் யாஷ் தயாள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.
பவர்பிளேவில் துல்லியமாகப் பந்துவீசும் திறன் கொண்ட ஜோஷ் ஹேசில்வுட் களமிறங்கவில்லை என்றால் அது ஆர்சிபி அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இடது கை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள், கடந்த சீசனில் இக்கட்டான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி உதவியிருந்தார். தற்போதைய சூழ்நிலையில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மங்கேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர்களான கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோரையே ஆர்சிபி அணி நம்பியிருக்க வேண்டியது உள்ளது.
அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதற்கட்ட போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. அந்த அணியில் பிரைடன் கார்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷால் படேல், ஹர்ஷ் துபே ஆகியோரை உள்ளடக்கிய பந்துவீச்சு துறைக்கு இன்றைய ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும். பாட் கம்மின்ஸ், எப்போது அணிக்கு திரும்புவார் என்பதும் தெளிவு படுத்தப்படவில்லை.
இதனால் இந்த சீசனுக்கு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் இரு அணியிலும் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வதற்கு பஞ்சம் இல்லை. ஆர்சிபி அணியில் சீனியர் நட்சத்திரமான விராட் கோலி, டிம் டேவிட், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், ரஜத் பட்டிதார், ரோமாரி யோ ஷெப்பர்டு ஆகியோர் மட்டை வீச்சில் வாண வேடிக்கை நிகழ்த்தக்கூடும்.
மறுபுறம் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹெய்ன்ரிச் கிளாசன், நித்திஷ்குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளனர். இரு அணியிலும் பந்துவீச்சு பலவீனமாக உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க விழா ரத்து
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் 11 இருக்கைகள் அவர்கள் நினைவாக காலியாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்சி எண் 11
தொடக்க போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி வீரர்கள் பயிற்சியின் போது 11 எண் கொண்ட ஜெர்சி அணிய உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆர்சிபி வீரர்கள் 11-ம் எண் பொறித்த ஜெர்சியை அணிந்து பயிற்சியில் ஈடுபடஉள்ளனர்.
74 ஆட்டங்கள்.. 65 நாட்கள்
ஐபிஎல் 19-வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் 65 நாட்கள் நடைபெறுகிறது. 70 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கள், இறுதிப் போட்டி என மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
ஜொலிப்பார்களா இளம் வீரர்கள்?
ஒவ்வொரு சீசனை போலவும் இம்முறையும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத பல இளம் வீரர்கள் தேர்வாளர்களைக் கவரும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆகிப் நபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கார்த்திக் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரசாந்த் வீர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.