

ராஞ்சி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக 2-0 என கைப்பற்றியது.
இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் முழுமையாக டெஸ்ட் தொடரை வென்று அந்த அணி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோத உள்ளன.
இதன் முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
மேலும் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தற்போதைய தென் ஆப்பிரிக்க தொடர் சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
ஷுப்மன் கில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ஒருநாள் போட்டித் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஷுப்மன் கில்லும், ஸ்ரேயஸ் ஐயரும் காயம் காரணமாக விளையாடவில்லை. இவர்கள் இல்லாதது அணியை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், தற்காலிக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் தங்கள் பணிகளை கூடுதல் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில் பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்துவதா அல்லது மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியை பயன்படுத்துவதா என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் திலக் வர்மா நம்பிக்கை அளிக்கக்கூடும். கேப்டன் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இடம் பெற்றால் விளையாடும் லெவன் அணியில் ரிஷப் பந்த் இடம் பெறுவது கடினமே.
இது ஒருபுறம் இருக்க ஷுப்மன் கில் இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறக்கப்படக்கூடும். பந்துவீச்சை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை நம்பியே இந்திய அணி களமிறங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்தில் ஒருநாள் போட்டித் தொடரை அணுகுகிறது. பேட்டிங்கில் வலுவான தொடக்கம் கொடுக்கக்கூடிய ரியான் ரிக்கெல்டன், எய்டன் மார்க்ரம், நிதானமாக செயல்படக்கூடிய கேப்டன் தெம்பா பவுமா, அதிரடியாக விளையாடக்கூடிய குயிண்டன் டிகாக், டெவால்ட் பிரேவிஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி ஸோர்ஸி ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான மார்கோ யான்சன், நந்த்ரே பர்கர் ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இவர்களுக்கு உறுதுணையாக லுங்கி நிகிடி, ஓட்னீல் பார்ட்மேன் செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் கேசவ் மஹாராஜ் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
அணிகள் விவரம் - இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்.
தென் ஆப்பிரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், குயிண்டன் டி காக், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி ஸோர்ஸி, மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரூபின் ஹெர்மன், கார்பின் போஷ், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், பிரெனலன் சுப்ராயன், லுங்கி நிகிடி, நந்த்ரே பர்கர், ஓட்னீல் பார்ட்மேன்.
நேரம்: பிற்பகல் 1.30 | நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
நெருக்கடியில் கம்பீர்: சொந்த மண்ணில் 2-வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்துள்ளதால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவரது ஒப்பந்தம் 2027 உலகக் கோப்பை வரை உள்ளதால் அவரது பதவிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனினும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் அவரது வியூகங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படக்கூடும்.
அன்றும்... இன்றும்: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் ஜேஎஸ்சிஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்தான் கடந்த 2013-ம் ஆண்டு ரோஹித் சர்மா முதன்முறையாக இந்திய அணியின் முழுநேர தொடக்க வீரராக களமிறங்கினார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் அன்றி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோற்றத்தையும் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது.
12 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா 37 வயதில் இதே மைதானத்தில் வித்தியாசமான சூழ்நிலையில் களமிறங்குகிறார். ஏனெனில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி, ஒருநாள் போட்டியில் மீண்டுவந்து பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம்.
ஆனால் ரோஹித் சர்மாவை பொறுத்தவரை 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை நோக்கி பயணிக்க வேண்டியது உள்ளது. இதனால் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். கடைசியாக அவர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார். இதேபோன்ற செயல் திறனை மீண்டும் வெளிப்படுத்த ரோஹித் சர்மா முயற்சிக்கக்கூடும்.