

படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் மோதியது. இதில் இந்திய அணி 17-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் மன்மீத் சிங் (17, 26 மற்றும் 36-வது நிமிடங்கள்), அர்ஷ்தீப் சிங் (4, 33 மற்றும் 40-வது நிமிடங்கள்), தில்ராஜ் சிங் (29, 32 மற்றும் 57-வது நிமிடங்கள்) தலா 3 கோல்கள் அடித்து அசத்தினர்.
குர்ஜோத் சிங் (39 மற்றும் 45-வது நிமிடங்கள்), அஜீத் யாதவ் (34 மற்றும் 47-வது நிமிடங்கள்), லுவாங் தவுனோஜாம் இங்கலெம்பா (43 மற்றும் 50-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். அன்மோல் ஏக்கா (29-வது நிமிடம்), ஷரதா ஆனந்த் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதி சுவிட்சர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
மதுரையில் நடைபெற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து 5-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவையும், தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தையும், நடப்பு சாம்பியனான ஜெர்மனி 7-0 என்ற கோல் கணக்கில் கனடாவையும் தோற்கடித்தன. ஜெர்மனிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.