

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு வந்தால் அதை ஏற்கமாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கடந்த ஆண்டில் மோசமாக விளையாடி தோல்வி கண்டது.
இதையடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு தனியாக ஒருவரை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அதை பிசிசிஐ மறுத்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேஸன் கில்லெஸ்பியிடம், இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு வந்தால் செல்வீர்களா என்று அவரது ஆதரவாளர்கள் அண்மையில் கேட்டிருந்தனர்.
அதற்கு கில்லெஸ்பி அளித்துள்ள பதிலில், ”இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு வந்தால் அதை நான் ஏற்க மாட்டேன். நன்றி” என்றார்.