

ஹார்சென்ஸ்: டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி நேற்று சீன தைபேவுடன் மோதியது.
முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக் ஷயா சென், சவு தியென் சென்னுடன் மோதினார். இதில் லக் ஷயா சென் 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது. லக் ஷயா செனின் வெற்றியால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானழ சியு சியாங் சியே, வாங் சி-லின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 23-21, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் லின் சுன் யி-யை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 48 நிமிடங்களில் முடிவடைந்தது.
முடிவில் இந்திய அணி 3-0 என முழுமையாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணி குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளது. 2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி அரை இறுதி சுற்றில் ஜப்பான் அல்லது பிரான்ஸுடன் பலப்பரீட்சை நடத்தும்.