

கடந்த 12-18 மாதங்களாக இந்திய அணிதான் உலகிலேயே மோசமாக பீல்டிங் செய்யும் அணியாக உள்ளது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சாடியுள்ளார்.
ஒவ்வொரு போட்டியிலுமே குறைந்தது 2 அல்லது 3 கேட்ச்களைத் தவற விடுகின்றது இந்திய அணி என்கிறார் வருண் ஆரோன். புதனன்று அகமதாபாத்தில் நெதர்லாந்து பாகிஸ்தான் அணியை விட நல்ல சவால் அளித்து 193 ரன்களை விரட்டுகையில் 17 ரன்களில் தோல்வி தழுவியது.
இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவிடம் வருண் ஆரோன் கூறும்போது, “பெரும் பிரச்சினை. கடந்த 12-18 மாதங்களில் இந்திய அணிதான் மோசமான பீல்டிங் அணியாகத் திகழ்கிறது. கேட்சிங் சதவீதம் 70%-க்கும் கீழ் உள்ளது. ஒவ்வொரு போட்டியிலுமே குறைந்தது 2 அல்லது 3 கேட்ச்களை நழுவ விடுகின்றனர்.
சூப்பர் 8 சுற்றிலும் அரையிறுதியிலும் முக்கியமான கேட்ச்களை நழுவ விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.” என்றார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை 9 கேட்ச்களை டிராப் செய்துள்ளது. அயர்லாந்துக்குப் பிறகு 2வது மோசமான பீல்டிங் அணியாக உள்ளது.
மாறாக இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதரின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி பீல்டிங்கில் பயங்கர முன்னேற்றம் கண்டுள்ளதை அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் எடுத்த திகைப்பூட்டும் கேட்ச்கள் நிரூபித்தன. அயர்லாந்து அணி 10 கேட்ச்களையும் நமீபியா அணி 6 கேட்ச்களையும் டிராப் செய்துள்ளன. நெதர்லாந்துக்கு எதிராகவும் கேட்ச்கள் விடப்பட்டன.
அதில் ஒரு கேட்சில் சூர்யகுமார் யாதவும், ரிங்கு சிங்கும் மோதிக்கொண்டனர். நல்ல வேளையாக ஒருவரும் காயமடையவில்லை. பணபலம் மிக்க பிசிசிஐ இந்திய பீல்டிங்கை முன்னேற்ற சிறந்த பயிற்சிகளை அளிக்க வேண்டும், ஒரு வீரர் சிக்சர்களை வெளுத்துக் கட்டுகிறார் என்பதற்காக அவரை அணியில் தேர்வு செய்வதை விட அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் திறன் அதாவது தரை பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவற்றில் தேறியிருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.