

ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (பிப்.19) திமுகவுடன் தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளது தேமுதிக. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தான் ஏற்கெனவே சொன்னபடி தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறினார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவிவந்தது. அதன்படி, இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளோம்.
தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியடிய திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2016-லேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும். பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அது இப்போது கேப்டன் இல்லாதபோது தாமதமாக நடந்துள்ளது.
மற்றபடி இந்தத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் போன்றவை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு திமுகவுடன் ஆலோசனை செய்தபின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.
இந்தக் கூட்டணி தேமுதிகவினர், பொது மக்களும் வரவேற்கும் கூட்டணியாக உள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து எல்லாம் அண்ணன் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.