

பர்மிங்காம்: ஐசிசி மகளிர் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (12-ம் தேதி) இங்கிலாந்தின் பர்மிங்காமில் கோலாகலமாக தொடங்குகிறது.
வரும் ஜூலை 5 வரை நடைபெறும் இந்தத் தொடரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்துகின்றன. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து நடத்தியிருந்தது. இம்முறை 12 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய 4 அணிகளும் தகுதி சுற்றின் வாயிலாக பிரதான சுற்றில் நுழைந்துள்ளன. இதில் நெதர்லாந்து அணி முதன்முறையாக டி 20 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
தொடக்க நாளான இன்று இரவு 11 மணிக்கு பர்மிங்காமில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து தனது முதல் ஆட்டத்தில் நாளை (13-ம் தேதி) மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதுவரை நடத்தப்பட்டுள்ள 9 தொடர்களில் 6 முறை ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணியை தவிர்த்து இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், நியூஸிலாந்து அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன. ஆஸ்திரேலிய அணி 7-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ள நிலையில் நியூஸிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
கடந்த 3 ஐசிசி தொடர்களிலும் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை கைகளில் ஏந்த முடியாமல் சென்ற தென் ஆப்பிரிக்க அணியும், கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியும், தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் கோப்பையை வெல்ல போராடக்கூடும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகவும் வலுவான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக உருவெடுத்துள்ளது. இதனால் இந்திய அணி, ஆஸ்திரேலியாவைப் போலவே ஒரே நேரத்தில் 50 ஓவர் மற்றும் டி20 ஆகிய இரு உலகக் கோப்பைகளையும் தன்வசம் வைத்திருக்கும் 2-வது அணி என்ற சாதனையை படைப்பதற்கு முயற்சிக்கக்கூடும்.
ரேணுகா சிங், கிராந்தி கவுட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் தீப்தி சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்களுடன், மிகவும் வலுவான பேட்டிங் வரிசையையும் இந்திய அணி கொண்டுள்ளது. இது, கடந்த ஏழு மாதங்களுக்குள் மற்றொரு ஐசிசி உலகக் கோப்பைப் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்குகிறது.
இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீ சரணி, யஸ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்குர், கிராந்தி கவுட், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ்.