

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஜூடோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை ஹர்ஷ் சிங் படைத்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெற்ற ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் காட்ஸ் என்ற வீரரை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஹர்ஷ் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
முன்னதாகப் பெண்களுக்கான ஜூடோ பிரிவில் அஸ்மிதா டே தங்கம் வென்றிருந்த நிலையில், தங்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீரராக ஹர்ஷ் சிங் இணைந்துள்ளார். முதல் சுற்றில் மாலவியின் சிகோண்டி கதேவாராவையும், காலிறுதியில் வனுவாட்டுவின் மோந்துயேலையும் (102-0), அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் நெட்டோவையும் வீழ்த்தி ஹர்ஷ் சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
1990-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் ஜூடோ சேர்க்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் யாமினி மௌரியாவும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 23 வயதான ஹர்ஷ் சிங், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிதியுதவியுடன் பயிற்சி பெற்று வரும் ஹர்ஷ் சிங், சர்வதேச அளவில் வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.