

சென்னை: குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது பதிப்பு வேளச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமன், ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கினுடன் மோதினார். இந்த ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிர்பெக் அப்துசத்தோரோவ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஜாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷை எதிர்கொண்டார். இதில் பிரனேஷ் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் களமிறங்கினார்கள். இந்த மோதலில் 39-வது நகர்த்தலின் போது குகேஷை, பிரனேஷ் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
நடப்பு தொடரில் குகேஷுக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. அவர், 2-வது சுற்றில் பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜாவிடம், 5-வது சுற்றில் அர்ஜூன் எரிகைசியிடமும் தோல்வி கண்டிருந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினை சந்தித்தார். இதில் அர்ஜூன் எரிகைசி வெள்ளை காய்களுடனும், நிஹால் சரின் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். பரபரப்பாக நடைபெற்ற இந்த மோதலில் நிஹால் சரின் 60-வது நகர்த்தலின் போது அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தினார். இதனால் நிஹால் சரின் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார்.