

யு-23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 72 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் அம்ருதா பூஜாரி, சீனாவின் வென் ஜின் கியூ உடன் மோதினார். இதில் அம்ருதா பூஜாரி 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
தங்கப் பதக்கத்துக்கான மோதலில் அம்ருதா, உக்ரைனின் இரினா சப்லோட்ஸ்காவுடன் மோதுகிறார். மகளிருக்கான 59 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் கோமல் 7-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் விக்டோரியா குசைனோவாவை வீழ்த்தினார்.
சர்வதேச போட்டிகளை நடத்த ரூ.50 கோடி வரை நிதியுதவி
இந்தியாவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்த தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு ரூ.50 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இதன்படி, ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்ற அல்லது முதல் 10 இடங்களுக்குள் வந்த விளையாட்டுப் பிரிவுகளுக்கு அதிகபட்சமாக ரூ.50 கோடி வழங்கப்படும். பிற தகுதியான விளையாட்டுப் பிரிவுகளுக்கு ரூ.20 கோடி வரையும், இந்தியாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ரூ.3 கோடி வரையும் நிதியுதவி அளிக்கப்படும். தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் ரூ.50 கோடி வரை வழங்கப்படும்.
காமன்வெல்த் விளையாட்டு: குஜராத்துக்கு ரூ.2,000 கோடி நிதி
2030-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக, குஜராத் அரசுக்கு ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இதற்கான நிதி, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். 2025-ம் ஆண்டின் விலைவிகித அடிப்படையில் ஒதுக்கப்படும் இந்த நிதி, பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு 2030-ல் சுமார் ரூ.2,500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்தியா - ஜெர்மனி மோதல்
2026-27-ம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி தொடரில், இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் ஆட்டங்கள் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்திய ஆடவர் அணியானது ஜெர்மனி (13, 16-ம் தேதி), அர்ஜெண்டினா (15, 18-ம் தேதி), இங்கிலாந்து (23, 26-ம் தேதி), ஸ்பெயின் (25, 28-ம் தேதி) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.
இந்திய மகளிர் அணி ஆட்டங்கள் பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறுகின்றன. இந்திய மகளிர் அணியானது இங்கிலாந்து (23, 26-ம் தேதி), ஸ்பெயின் (25, 28-ம் தேதி) அணிகளுடன் மோதுகிறது.
டென்னிஸில் ஹரிணி, குஷி ஜோடி சாம்பியன்
ஃபெனஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் யு-16 மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டின் சன்மிதா ஹரிணி, குஷி கதியான் ஜோடி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பூர்வி பட்வா, ரஞ்சனா சங்க்ராம் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் குஷி கதியான் நேற்று மட்டும் 3 போட்டிகளில் விளையாடினார். இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், யு-16 ஒற்றையர் மற்றும் யு-14 அரை இறுதி ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசத்தினார்.
பெங்களூரு - சென்னை இன்று மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி தனது முதல் ஆட்டத்தை கோவா எஃப்சி அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிளப் டெல்லி அணியை தோற்கடித்து இருந்தது.
சென்னையின் எஃப்.சி. தலைமைப் பயிற்சியாளர் கிளிஃபோர்ட் மிராண்டா கூறும்போது, “பெங்களூரு அணிக்கு அதிக இடம் கிடைக்காத வகையில் நாங்கள் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எதிரணிக்கு இடமும், நேரமும் கொடுக்காமல் விளையாட வேண்டும்” என்றார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (18-ம் தேதி) முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து தமிழக அணி ரயில்வே அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. இந்த ஆட்டம் வரும் 26 முதல் 29 வரை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.இந்த 2 ஆட்டங்களுக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மாநில சீனியர் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.
அணி விவரம்:சாய் கிஷோர் (கேப்டன்), ஆந்த்ரே சித்தார்த், நாராயணன் ஜெகதீசன், விமல் குமார், பிரதோஷ் ரஞ்ஜன் பால், பாபா இந்திரஜித், சோனு யாதவ், அஜித் ராம், ஹெம்சுதேஷன், குர்ஜப்னீத் சிங், சரவண குமார், ஆதிஷ், அஜிதேஷ், நிதிஷ் ராஜகோபால், தீபேஷ்.