

நியூ ஜெர்சி: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியனாகி உள்ளது ஸ்பெயின் அணி. இந்நிலையில், இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் விருதுகளை வென்று அசத்தி உள்ளனர். அவர்கள் குறித்து பார்ப்போம்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் கடந்த மாதம் தொடங்கிய ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று அதிகாலை நிறைவடைந்தது. இதில் 48 அணிகள் பங்கேற்று விளையாடின. குரூப் சுற்று, ரவுண்ட் ஆப் 32, ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என பல்வேறு சுற்றுகளாக ஆட்டங்கள் நடைபெற்றன.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்றது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை ஸ்பெயின் வீழ்த்தி, பட்டம் வென்றது.
இந்த தொடரில் மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 308 கோல்கள் பதிவாகின. அதில் 8 ஆட்டங்களில் விளையாடிய ஸ்பெயின் அணி, விட்டுக் கொடுத்தது ஒரே ஒரு கோல் மட்டும். அதுதான் அந்த அணியை சாம்பியன் பட்டம் வெல்ல செய்துள்ளது. மேலும், கோல் பதிவு செய்வதற்கான முயற்சியை (Attempts at Goal) 140 முறை அந்த அணி மேற்கொண்டது.
‘கோல்டன் பூட்’ வென்ற எம்பாப்பே
இந்த தொடரில் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, மொத்தம் 10 கோல்களை பதிவு செய்தார். இதுவே இத்தொடரில் தனியொரு வீரர் பதிவு செய்த அதிக கோல்கள் ஆகும். அதனால் ‘கோல்டன் பூட்’ விருதை அவர் வென்றார். இந்த விருதை இரண்டாவது முறையாக அவர் வென்றுள்ளார். கடந்த 2022 தொடரிலும் அவர் கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார். மேலும், சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 4 முறை அசிஸ்ட் செய்து உதவினார்.
அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி 8 கோல்களும், இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம், நார்வே அணியின் ஹாலண்ட் ஆகியோர் தலா 7 கோல்களும் பதிவு செய்து அடுத்தடுத்த இடங்களில் அதிக கோல் பதிவு செய்த வீரர்களின் வரிசையில் உள்ளனர்.
‘கோல்டன் பால்’ விருதை தட்டிய ரோட்ரி
ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி, இந்த தொடரின் சிறந்த வீரர் என்ற முறையில் ‘கோல்டன் பால்’ விருதை வென்றார். மொத்தம் 790 பாஸ்களை அவர் இந்த தொடரில் மேற்கொண்டிருந்தார். இந்த பிரிவில் இரண்டாம் இடத்தை மெஸ்ஸியும், மூன்றாம் இடத்தை எம்பாப்பேவும் பிடித்தனர்.
உனாய் சிமோனுக்கு கோல்டன் கிளவ்
ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் உனாய் சிமோன், இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த தொடரில் 8 ஆட்டங்களில் வெறும் ஒரே ஒரு கோல் மட்டுமே அவர் விட்டுக் கொடுத்திருந்தார். அதன் மூலம் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதை அவர் வென்றார்.
அதேபோல சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 19 வயது வீரர் குபெர்சி வென்றார். இந்த தொடரில் ஃபேர் பிளே விருதை நெதர்லாந்து அணி வென்றது.