

நியூயார்க் நகரில் நடைபெற்ற மிக நீண்ட, 48 அணிகள் பங்கேற்ற, மாபெரும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது. அர்ஜெண்டின கால்பந்து மேதை மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையாக இது அமைந்ததை விட, அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். ஆனால், காரணம் அவர் அல்ல, ஸ்பெயின் அணியின் அதீதத் திறமையே.
மேலும், தூரத்திலிருந்து கோல் அடிக்கும் திறமை கொண்ட என்சோ பெர்னாண்டஸ் தனது 2-வது மஞ்சள் அட்டை, அதாவது சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டது அர்ஜெண்டினாவை 10 வீரர்களுக்குக் குறுக்கியது.
90 நிமிடங்கள் பிரதான ஆட்டம் முடிந்து, கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே ஃபெர்ரான் டோரஸ் அடித்த கோல், அர்ஜெண்டினாவின் கதவுகளை மூடியது. அர்ஜெண்டினா கோல் கீப்பர் மார்ட்டினேஸ் என்னும் ஜீனியஸ் தன் அனுபவத்தைக் காட்டவில்லை எனில், அர்ஜெண்டினா இன்னும் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் என்பதுதான் நிதர்சனம்.
106-வது நிமிடத்தில் வெற்றி கோல்
பார்சிலோனா அணியின் முன்கள வீரரான டோரஸ், பெட்ரோ போர்ரோ அனுப்பிய கிராஸைத் தொடர்ந்து நிக்கோ வில்லியம்ஸ் தலையால் முட்டிய பந்து தன்னிடம் வந்ததும், அதை பக்கவாட்டுக் காலால் தட்டி கோலாக்கினார். இதில் அட்டகாசமான விஷயம் என்னவெனில், பெட்ரோ போரோ அனுப்பிய கிராஸை வலைக்கு சற்றே அருகே நின்று கொண்டிருந்த நிக்கோ வில்லியம்ஸ் கோல் நோக்கித் திருப்பாமல் தலையால் பின் பக்கமாக முட்டி பின்னால் நின்று கொண்டிருந்த, ஆனால் அர்ஜெண்டின வீரர்களால் ‘மார்க்’ செய்யப்படாமல் நின்று கொண்டிருந்த டோரஸுக்கு அனுப்பியதுதான்.
இந்தப் போட்டி பலரும் கணித்திருந்தபடியே நடந்தது. ஸ்பெயின் அதிக நேரம் பந்தைத் தன் வசம் வைத்திருந்தது. அர்ஜெண்டினா அணியோ மெஸ்ஸியைப் பயன்படுத்தி சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. 39 வயதான மெஸ்ஸியின் உடல் திறனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த அணுகுமுறை, இந்த உலகக் கோப்பையில் எகிப்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தாமதமான வெற்றிகளில் பலன் அளித்திருந்தது. ஆனால், முந்தைய அணிகளைவிட ஸ்பெயின் உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடனும், நுட்பமான உத்தி ரீதியாகவும் சிறந்த அணியாக இருந்தது.
இதனால் நடந்தது என்னவெனில், உலகக் கோப்பை வரலாற்றில் ஓர் அணியின் செயல்திறனற்ற தாக்குதலுக்கான மோசமான சாதனை ஒன்று பதிவானது. அர்ஜெண்டினாவின் முதல் ஷாட்டே 115-வது நிமிடத்தில்தான் வந்தது. வெறுப்பில் அர்ஜெண்டினா உடல் ரீதியான மோதலில் இறங்கியது. ஆனால், நடுவர் ஸ்லாவ்கோ வின்சிச் அதிகமாக தலையிடாமல் ஆட்டத்தைத் தொடர அனுமதித்தார். கடைசியில் அவரே பொறுமை இழந்தார். காயம் காரணமாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் பாவ் குபார்சியை வீழ்த்திய என்சோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று வெளியேற்றப்பட்டார்.
இது தனது கடைசி உலகக் கோப்பை என்று மெஸ்ஸி ஏற்கெனவே கூறியிருந்தார். 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்டுகளுடன் ஒரு சாதனையான தொடருக்குப் பிறகு, அவர் உலகக் கோப்பை அரங்கிலிருந்து வெளியேறினார். கடந்த 4 உலகக் கோப்பைகளில் மூன்றாவது முறையாக அர்ஜெண்டினா இறுதிப் போட்டியை எட்டியது. 2014-ல் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த அந்த அணி, 2022-ல் பிரான்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது.
ஏற்கெனவே ஐரோப்பிய சாம்பியனாக இருந்த ஸ்பெயின், 8 போட்டிகளில் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக் கொடுத்து, இந்த உலகக் கோப்பையை நிறைவு செய்தது. காலிறுதியில் பெல்ஜியத்துக்கு எதிராக மட்டுமே அந்த அணி கோல் விட்டது. அர்ஜெண்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கூடுதல் நேரத்தின் இறுதிப் பகுதியில் டோரஸ் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்யும் வரை ஸ்பெயின் தனது அமைதியையும் கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொண்டது.
போட்டி முடிவில், ஸ்பெயின் 20 ஷாட்களை கோல் நோக்கி அடித்திருக்க, அர்ஜெண்டினாவால் வெறும் 2 ஷாட்களே அடிக்க முடிந்தது. ஸ்பெயின் அடித்த 20 ஷாட்களில் 12 கோல் நோக்கி இருந்தன. உலக சாம்பியனாக களமிறங்கிய அர்ஜெண்டினாவின் ஷாட்களில் ஒன்று கூட கோல் நோக்கி செல்லவில்லை.
117 நிமிடங்கள்... தாக்குதல் வறட்சி!
அர்ஜெண்டினா 117 நிமிடங்கள் வரை ஒரு ஷாட்டைக் கூட கோல் நோக்கி அடிக்க முடியவில்லை. இதற்கு, அந்த அணி எந்த விளையாட்டையும் விளையாடவில்லை அல்லது அணியில் மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது என்று பொருள். வழக்கமான 90 நிமிட ஆட்ட நேரம் முடியும் வரை ஸ்பெயின் கோல் நோக்கி அர்ஜெண்டினா ஒரு ஷாட்டைக் கூட அடிக்கவில்லை. அது கோல் நோக்கி சென்றதா, இலக்கைத் தவறியதா என்பது கூட கேள்வியல்ல - ஒரு ஷாட் கூட இல்லை.
கூடுதல் நேரத்திலும் அர்ஜெண்டினாவின் ஷாட் இல்லாத நிலை நீடித்தது. என்சோ பெர்னாண்டஸ் வெளியேற்றப்பட்டதால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என்பதும் ஒரு காரணமாக இருந்தது. இதில் பெரும் பகுதி ஸ்பெயினின் சிறப்பான ஆட்டத்துடன் தொடர்புடையது.
8 போட்டிகளில் வெறும் ஒரு கோலை மட்டுமே விட்டுக் கொடுத்து அந்த அணி தொடரை முடித்தது. பந்தைக் கட்டுப்படுத்தும் திறனும், தீவிரமான அழுத்தம் கொடுக்கும் முறையும் அர்ஜெண்டினாவுக்கு பந்தையும் கால அவகாசத்தையும் கொடுக்க மறுத்தது. கோல் நோக்கி ஷாட் அடிக்க இந்த இரண்டுமே அவசியம்.
ஆனால், இந்த உலகக் கோப்பைக்காக பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தேர்வு செய்த ஆட்டத் திட்டத்துக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. அர்ஜெண்டின பயிற்சியாளர் ஸ்கலோனி, அணியை மெஸ்ஸியைச் சுற்றியே கட்டமைத்தார். இதை சமாளிக்க, அணியை குறுகிய அமைப்பில் விளையாடச் செய்தார். இதனால் நடுக்களத்தில் ஸ்பெயின் புகுந்து விளையாடியது.
அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், ரோட்ரிகோ டி பால், லியாண்ட்ரோ பரேடெஸ் ஆகியோர் தடுப்பாட்டத்தில் கடுமையானவர்கள். ஆனால், வேகமான இயக்கம் மற்றும் சுறுசுறுப்புக்கோ, எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பதற்கோ இவர்கள் ஆட்டம் போதாது. இதனால் மெஸ்ஸி ஒரே ஒரு முன்கள வீரருடன் விளையாட வேண்டிய நிலையை உருவாக்கியது. இதனால் ஒவ்வொரு போட்டியிலும் ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் லவுட்டாரோ மார்ட்டினஸ் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மெஸ்ஸியையும், இந்த உலகக் கோப்பையில் அவரது செயல்பாடுகளையும் (8 கோல்கள், 4 அசிஸ்ட்கள்) அணியில் இணைக்க இதுவே ஒரே வழி என்று ஸ்கலோனி கூறலாம். அவரது முடிவை நியாயப்படுத்தும் வகையில் மெஸ்ஸியின் செயல்பாடுகள் இருந்தன. ஆனால், மாற்று ஆட்டத் திட்டம் இல்லாதது இறுதிப் போட்டியில் தெளிவாக வெளிப்பட்டது.
அர்ஜெண்டினா விரக்தியிலும் உடல் ரீதியான மோதல்களிலும் சிக்கிக் கொண்டபோது, அந்த அணியின் மிகத் திறமையான சில வீரர்கள் பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.
கோல் கீப்பர் ‘ஜீனியஸ்’ மார்ட்டினேஸ்!
அர்ஜெண்டின கோல் கீப்பர் மார்ட்டினேஸின் ஜீனியஸ் சேவ்கள் இல்லையெனில், ஸ்பெயின் குறைந்தது 4 கோல்களையாவது போட்டிருக்கும். முதல் பாதியில் வழக்கமான சேவ்களைச் செய்த அவர், பின்னர் போட்டியின் போக்கையே மாற்றக் கூடிய பல தடுப்புகளை நிகழ்த்தினார். 120 நிமிடங்களில் மொத்தம் 11 சேவ்களைச் செய்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் பதிவான அதிகபட்ச சேவ்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிலும், வலது கையில் காயத்துடன் விளையாடியபடியே மார்ட்டினஸ் இந்தச் சாதனையைப் படைத்தார். ஸ்கோர் 1-0 என்றிருந்தாலும், மார்ட்டினஸ் இல்லாமல் இந்தப் போட்டி முற்றிலும் வேறுவிதமாக அமைந்திருக்கக்கூடும்.
யமால் எனும் சக்தி!
அர்ஜெண்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரைட் விங்கில் லாமைன் யமால் தடுக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்து, அர்ஜெண்டின பெனால்டி பகுதிக்குள் பந்தை பலமுறை செலுத்தினார், கோலை நோக்கியும் அடித்தார். ஆனால், மார்ட்டினேஸ் தடுத்து விட்டார். மேலும் சுயநலமாக ஆடாமல் பந்தை கோலுக்கு அருகிலும் கூட சக வீரருக்குப் பாஸ் செய்ததா.
அவரது இந்தப் பண்பை புகழ்ந்த ஸ்பெயின் பயிற்சியாளர் ஃபியுயெண்ட்டே, “யமால் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். இது அவர் முதிர்ச்சியடையவும், ஏற்கெனவே இருப்பதை விட இன்னும் சிறந்த கால்பந்து வீரராக உருவெடுக்கவும் உதவும். அவர் அணியின் நலனுக்காக உண்மையாகவே தியாகம் செய்தார். எனது அணியில் இது மிகவும் முக்கியமானது. என் பார்வையில், அவர் ஒரு சிறந்த உலகக் கோப்பைத் தொடரை விளையாடினார்” என்றார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில், கண்ணீருடன் இருந்த மெஸ்ஸியை ஸ்பெயினின் பிரகாசிக்கும் இளம் நட்சத்திரமான லமீன் யமால் அணைத்துக் கொண்ட தருணம், ஒரு குறியீட்டுச் சம்பவமாகத் தோன்றியது. அது ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறைக்கு மகுடம் கைமாறிய தருணம் போல இருந்தது.
மெஸ்ஸியின் குட் பை!
39 வயதிலும் ஒரு நாட்டைத் தனது தோள்களில் சுமந்து தொடர்ந்து வெற்றியைத் தேடித் தர முடியும் என்ற ஆசைக்கு இறுதியில் யதார்த்தம் முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த உலகக் கோப்பை முழுவதும் மெஸ்ஸி அபாரமாக விளையாடினார். ஆனால், ஸ்பெயின் அவருக்கு மிகவும் வலுவான அணியாக அமைந்தது. மெஸ்ஸி கோல் நோக்கி ஒரு ஷாட் மட்டுமே அடித்தார்; அதுவும் வலுவில்லாமல் தடுக்கப்பட்டது. எதிரணியின் பெனால்டி பாக்ஸில் ஒரு முறை கூட பந்தைத் தொடவில்லை மெஸ்ஸி. இரண்டு முறை பந்தைத் தன் வசமிருந்து இழந்தார் நான்கு முறை ஃபவுல் செய்யப்பட்டார்.
2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் இதே மைதானத்தில் தோல்வியடைந்த பிறகு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்தார். அவரது ஓய்வு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் அணிக்குத் திரும்பிய பிறகு, அர்ஜெண்டினா ஓர் உலகக் கோப்பையையும், இரண்டு கோபா அமெரிக்கா கோப்பைகளையும், 2022 ஃபினலிசிமா கோப்பையையும் வென்றது. இவர் விளையாடிய 1000-க்கும் மேற்பட்ட போட்டிகளும் அவரது சாதனைகளும் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும்.