பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி - மும்பையை 30 ரன்களில் வீழ்த்தி அசத்தல்!

ஜோப்ரா ஆர்ச்சர் அபாரம்
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி - மும்பையை 30 ரன்களில் வீழ்த்தி அசத்தல்!
Updated on
2 min read

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.

இன்று (மே 24) பிற்பகல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு சீசனின் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

அந்த அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இந்த சீசனில் சிறப்பாக தொடக்கம் கொடுத்து வந்த இந்த இணை விரைந்து விக்கெட்டை இழந்தது. ஜெய்ஸ்வால் 17, வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் துருவ் ஜூரெலும், ஷனகாவும். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் அணி. ஷனகா-29, துருவ் ஜூரெல்-38, ஃபெரைரா-18, ஷுபம் துபே-5, ஆர்ச்சர்-32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜா 19, பர்கர் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

206 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது. முதல் ஓவரில் ரோஹித் சர்மா (0), மூன்றாவது ஓவரில் நமன் திர் (6) விக்கெட்டை கைப்பற்றினார் ராஜஸ்தான் பவுலர் அர்ச்சர். ரிக்கல்டன்-12 மற்றும் திலக் வர்மா-3 ரன்களில் ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

அந்த இக்கட்டான நிலையில் 63 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தது சூர்யகுமார் யாதவ் மற்றும் வில் ஜேக்ஸ் கூட்டணி. 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்துக்கு வந்த ஹர்திக் பாண்டியாவுடன் 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சூர்யகுமார் யாதவ். ஹர்திக் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றிக்கான இலக்கை நெருங்க முடியவில்லை. கார்பின் போஷ்-2, சூர்யகுமார் யாதவ்-60, தீபக் சாஹர்-8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 30 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்: இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி இருந்தது. அப்போது மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. அத்தகைய சூழலில்தான் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸின் இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வெளியேறி உள்ளன.

இப்போது பிளே ஆஃப் சுற்றில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று குவாலிபையர்-1 ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. வரும் புதன்கிழமை அன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. எலிமினேட்டரில் வெற்றி பெறுகின்ற அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் விளையாடும்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி - மும்பையை 30 ரன்களில் வீழ்த்தி அசத்தல்!
100 மீட்டர் ஓட்டத்தில் குரிந்தர்வீர் சிங் புதிய சாதனை - 10.09 வினாடிகளில் கடந்து அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in