FIFA WC 2026 Final - கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு

FIFA WC 2026 Final - கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
Updated on
1 min read

திருவனந்தபுரம்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளாவில் அனைத்துப் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நள்ளிரவில் நடைபெறவுள்ள அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று கேரளாவில் நாளை (திங்கட்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் என்.சம்சுதீனும் தனது சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார்.

அமைச்சர் என்.சம்சுதீன் வெளியிட்ட அந்தப் பதிவில், "இப்போது மகிழ்ச்சியா, குழந்தைகளே?. கால்பந்து விளையாட்டு ஆர்வலர்களான மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரள பொதுக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்ளுக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு, திங்கட்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்குமாறு சிபிஎம் தலைவரும் முன்னாள் கேரளக் கல்வி அமைச்சருமான வி. சிவன்குட்டி மாநில அரசை வலியுறுத்தியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தொடங்கவுள்ள இறுதிப் போட்டி திங்கட்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்பதால், மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்வது கடினமாக இருக்கும் என்று சிவன்குட்டி கூறினார். மேலும், யுடிஎஃப் கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்களும் இதேபோன்று விடுமுறை கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

நாளைய விடுமுறைக்கு பதிலாக அடுத்துவரும் சனிக்கிழமை கல்வி நிறுவனங்களை இயக்கி சமன் செய்து கொள்ளலாம் என்று யோசனை கூட தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FIFA WC 2026 Final - கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
மெஸ்ஸியின் மகுடமா, யமாலின் புதிய யுகமா? - ஒரு முன்னோட்ட அலசல் | FIFA WC 2026 Final

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in