

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டி நாளை (20-ம் தேதி) கோலாகலமாக அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டி உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாபெரும் மோதலாக அமைந்துள்ளது.
பட்டம் வெல்வதற்கான மோதலில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவும், 2010-க்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கும் ஸ்பெயினும் மோதுகின்றன. இது ஒரு சாதாரண இறுதிப்போட்டி அல்ல. இரண்டு கால்பந்து தலைமுறைகளின் மோதலாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஒரு புறம் அனுபவத்தின் உச்சத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, மறுபுறம் புதிய தலைமுறையின் அடையாளமாக உருவெடுத்துள்ள ஸ்பெயினின் லாமின் யமால் உள்ளனர்.
39 வயதாகும் லயோனல் மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு அத்தியாயம் எழுதும் வாய்ப்பு உள்ளது. அவர், ஒட்டுமொத்த அணியின் இதய துடிப்பாக திகழ்கிறார். தற்போதைய இறுதிப்போட்டி அவரது கடைசி உலகக் கோப்பை ஆட்டமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 19 வயதாகும் லாமின் யமால் உலக கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக உள்ளார். அவரது வேகம், டிரிபிளிங், படைப்பாற்றல் ஸ்பெயினின் மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது.
லயோனல் ஸ்கலோனி பயிற்சியின் கீழ் விளையாடி வரும் அர்ஜெண்டினா நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது போராட்ட மனப்பான்மையை நிரூபித்துள்ளது. நாக் அவுட் சுற்றில் கேப் வெர்டே, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்து, கால் இறுதியில் சுவிட்சர்லாந்து மற்றும் அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்
போட்டியை எட்டியுள்ளது. இதில் எகிப்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பின்தங்கிய நிலையிலிருந்து இறுதிக்கட்டத்தில் மீண்டு வந்து வெற்றிகளை வசப்படுத்தி மன உறுதியை வெளிப்படுத்தியிருந்தது அர்ஜெண்டினா அணி.
இந்த இரு ஆட்டத்திலும் கடும் அழுத்தத்துக்கு மத்தியிலும் அணியின் அனுபவம் வெளிப்பட்டது. பந்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தருணத்தில் கட்டுப்படுத்தியும், வேகமாக தாக்க வேண்டிய நேரத்தில் தாக்கியும் அர்ஜென்டினா தனது முதிர்ச்சியை நிரூபித்தது. லயோனல் மெஸ்ஸி இன்னும் அணியின் இதய துடிப்பாகவே இருக்கிறார். அவரது ஓட்டங்கள் முந்தைய வேகத்தில் இல்லாவிட்டாலும், ஆட்டத்தை கணிக்கும் திறன், ஒரு பாஸால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல்,
முக்கிய தருணங்களில் முடிவெடுக்கும் நுண்ணறிவு ஆகியவை இன்னும் உலகத் தரத்தில் உள்ளன. அவருடன் ஜூலியன் ஆல்வாரஸ், லவுதாரோ மார்டினஸ், அலெக்சிஸ் மெக் அலிஸ்டர், என்சோ பெர்னாண்டஸ் ஆகியோர் தாக்குதலிலும் மிட்பீல்டிலும் சிறப்பாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். பாதுகாப்பில் கிறிஸ்டியன் ரொமேரோவும், கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸும் அணிக்கு பெரிய பலமாக இருக்கின்றனர்.
2010-ம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின், அதன் பிறகு உலக அரங்கில் ஆதிக்கத்தைத் தொடர முடியாமல் தடுமாறியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் லூயிஸ் டெ லா ஃபுவென்டே பயிற்சியின் கீழ் அந்த அணி மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் ஸ்பெயின் விளையாடிய விதம் பல முன்னாள் வீரர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. போர்ச்சுகலை வீழ்த்தியது, பெல்ஜியத்தை சமாளித்தது, அரையிறுதியில் பிரான்ஸை கட்டுப்படுத்தி வென்றது என ஒவ்வொரு சுற்றிலும் அணியின் தரம் உயர்ந்து வந்தது.
அதிக வேகம், நேரடி தாக்குதல், விங் வழி ஊடுருவல் ஆகியவற்றை இணைத்து புதிய வடிவத்தை ஸ்பெயின் உருவாக்கியுள்ளது.பந்தை நீண்டநேரம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாக்குதலை அமைக்கும் அவர்களின் பாணி நடப்பு தொடரில் எதிரணிகளுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஸ்பெயின் அணியின் இளம் புயலான லாமின் யமால் உலக அரங்கில் எந்த அச்சமும் இல்லாமல் விளையாடுவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
வலதுபுறத்தில் இருந்து பந்தை உள்ளே வெட்டியடித்து எதிரணியின் பாதுகாப்பைக் கலைப்பது, துல்லியமான குறுக்கு பாஸ்கள், எதிர்பாராத ஷாட்கள் என இவை அனைத்தும் ஸ்பெயினின் தாக்குதலின் முக்கிய ஆயுதமாக மாறியுள்ளன. யமாலை கட்டுப்படுத்துவது அர்ஜெண்டினாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதேபோல் லயோனல் மெஸ்ஸிக்கு இடம் கொடுத்தால் அதன் விலையை ஸ்பெயின் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தப் போட்டியின் உண்மையான போர் மிட்பீல்டில்தான் நடைபெற வாய்ப்புள்ளது. ஸ்பெயின் தரப்பில் ரோட்ரி, பெட்ரி, கவி ஆகியோரின் பந்துக் கட்டுப்பாடு உலகத் தரத்தில் உள்ளது. இதேபோன்று முன்களத்தில் மிக்கல் ஓயர்சபால் வலு சேர்த்து வருகிறார். அர்ஜெண்டினா தரப்பில் என்சோ பெர்னாண்டஸ், மெக் அலிஸ்டர், டி பால் ஆகியோர் கடின உழைப்புடன் எதிரணியின் ரிதத்தை உடைக்கும் திறன் கொண்டவர்கள்.
சமீபத்திய ஆட்டங்களில் ஸ்பெயின் சிறப்பான கட்டுப்பாட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் உலகக் கோப்பை நாக்அவுட் போட்டிகளில் அர்ஜெண்டினாவின் அனுபவம் மற்றும் அழுத்தமான தருணங்களில் வெற்றியை பறிக்கும் திறன் மிகப்பெரிய பலமாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இறுதிப் போட்டியானது மெஸ்ஸியின் அற்புதமான உலகக் கோப்பை பயணத்துக்கு மீண்டும் ஒரு மகுடம் சூட்டுமா? அல்லது இளம் புயல் லாமின் யமாலை
உள்ளடக்கிய ஸ்பெயின் உலக கால்பந்தின் அடுத்த சகாப்தத்தை தொடங்குமா? என்ற கேள்விக்கான பதிலை காண உலகக் கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. இதற்கு முன்னர் கடந்த 1966-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியிருந்தது.
‘போராடுவோம்’
அர்ஜெண்டினா அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி கூறும்போது, “இறுதிப் போட்டியில் எங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவோம். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், நாங்கள் ஒருபோதும் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என்றார்.
2024-ம் மார்ச்சில் லண்டனில் நடைபெற்ற கொலம்பியாவுக்கு எதிரான நட்புரீதியான போட்டியில் 1-0 எனத் தோற்றதற்குப் பிறகு, ஸ்பெயின் அணி நட்புரீதியான போட்டிகள், நேஷன்ஸ் லீக், யூரோ 2024 மற்றும் 2026 உலகக் கோப்பையில் இதுவரை என 37 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் வலம் வருகிறது. இதில் அந்த அணி 28 வெற்றிகளையும், 9 டிராவையும் பதிவு செய்துள்ளது.
கோல் கீப்பர்கள் எப்படி?
பெனால்டி சூழல்களில் உலகின் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக திகழ்கிறார் அர்ஜெண்டினாவின் எமிலியானோ மார்டினஸ். பெரிய அளவிலான போட்டிகளில் அழுத்தத்தை சமாளிக்கும் அவரது திறன் ஏற்கெனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஸ்பெயினின் உனாய் சிமோனும் இந்த தொடரில் நம்பிக்கைக் குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது சிறப்பான செயல் திறனால் நடப்பு தொடரில் ஸ்பெயின் அணி 1 கோல் மட்டுமே வாங்கி உள்ளது.
பொன்னான வாய்ப்பு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடரின் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட பெருமை இத்தாலி மற்றும் பிரேசில் அணிகளுக்கு மட்டுமே சேரும். இத்தாலி அணி 1934-ல் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் 1938-ம் ஆண்டு தொடரில் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் பின்னர் இந்த சாதனையை 1958 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் பிரேசில் அணி படைத்தது.
ஆனால் அதன் பின்னர் எந்தவொரு அணியும் அடுத்தடுத்து உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆனால் தற்போது இந்த சாதனையை படைக்கும் வாய்ப்பு நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணிக்கு கிடைத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி, ஏற்கெனவே சாதனைகளால் நிரம்பி வழியும் தனது கால்பந்து வரலாற்றில் மற்றுமொரு மகுடத்தைச் சூட்டிக்கொள்ளும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
விளையாடும் பாணி
அர்ஜெண்டினா அணி அதிக நேரம் பந்தை வைத்திருக்க முயற்சிக்காது. மாறாக, சரியான தருணத்துக்காக காத்திருந்து எதிர்தாக்குதலில் வேகமாக முன்னேறும். ஸ்பெயின் அதற்கு நேர்மாறாக பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இடைவெளிகளை உருவாக்கும். பக்கவாட்டில் யமால் மற்றும் பிற விங் வீரர்களின் வேகத்தை முழுமையாக பயன்படுத்தும்.
‘பிரமிப்பாக இருக்கிறது’
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டத்தில் 39 வயதாகும் அர்ஜெண்டினா நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, 19 வயதாகும் ஸ்பெயின் அணியின் இளம் புயல் லாமின் யமால் ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 5 மாத குழந்தையாக இருக்கும் லாமின் யமாலை, மெஸ்ஸி கையில் தூக்கி வைத்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில் மெஸ்ஸி கூறும்போது, “லாமின் யமால் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவருக்கு நல்லது நடைபெற வாழ்த்துகிறேன். நானும் யமாலும் இருக்கும் சிறுவயது புகைப்படம் மிகவும் அதிசயமானது. தற்போது இருவரும் களத்தில் விளையாட இருக்கிறோம். இது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இறுதிப் போட்டியில் அவரை சிறப்பாக விளையாட விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
மோதிரம் வழங்குவது ஏன்?
உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் மோதிரங்களை பரிசாக வழங்க பிஃபா முடிவு செய்துள்ளது. பட்டம் வெல்லும் அணிகளுக்கு மோதிரங்கள் வழங்கும் முறை, 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வட அமெரிக்க விளையாட்டுகளில் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இறுதிப் போட்டி அமெரிக்காவில் நடை பெறுவதால் இம்முறை அந்த பாரம்பரியம் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
உலகக் கோப்பையை வெல்லும் அணியின் வீரர்களுக்கு வழக்கம்போல தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும். அதோடு, சாம்பியன் பட்டம் வென்ற சில நிமிடங்களிலேயே வெற்றி பெற்ற அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு தற்காலிக மோதிரங்களும் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 மோதிரங்கள் வழங்கப்படும். அந்த மோதிரத்தின் ஒரு பக்கத்தில் உலகக் கோப்பை டிராபியின் வடிவமும், மறுபக்கத்தில் வெற்றி பெற்ற அணியின் அடையாளமும் பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கப்படும் என்று பிஃபா தெரிவித்துள்ளது.
96 வருடங்களுக்கு பிறகு...
ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலாகும். ஏனெனில், 1930-ல் நடைபெற்ற முதலாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு (உருகுவே - அர்ஜென்டினா), உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் மொழி பேசும் இரு நாடுகள் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.