இறுதி அத்தியாயத்தை நோக்கி மெஸ்ஸியும் ரொனால்டோவும்!

இறுதி அத்தியாயத்தை நோக்கி மெஸ்ஸியும் ரொனால்டோவும்!
Updated on
2 min read

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, உலகக் கால்பந்தின் மையமாக அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சியும், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் திகழ்ந்து வருகின்றனர்.

பல்வேறு சாதனைகளை முறியடித்தவர்கள், கோப்பைகளை வென்றவர்கள், கோடிக்கணக்கான ரசிகர்களை ஊக்கப்படுத்தியவர்கள், நவீன கால்பந்தில் தனிநபர் சிறப்புக்கான புதிய வரையறையை உருவாக்கியவர்கள் இவர்களே. பாலோன் டி'ஓர் விருதுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்கள் மற்றும் உலக விளையாட்டு வரலாற்றில் மிகச் சிறந்த போட்டித்தன்மை கொண்ட நட்பான போட்டியை உருவாக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு.

தற்போது இவர்கள் தங்களது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் அந்திம காலத்தை எட்டி உள்ளனர். ஆமாம்…. 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை தொடரில் இவர்கள் இருவரின் இறுதி அத்தியாயத்தைக் காணத் ரசிகர்கள் தயாராகி உள்ளனர். மெஸ்சிக்கு 39 வயதும், ரொனால்டோவுக்கு 41 வயதும் ஆகிறது. இதனால் அவர்கள், 2030-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடுவது என்பது அரிதாகவே இருக்கக்கூடும்.

2006-ம் ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் உலகை மெய்மறக்க வைத்த இளம் நட்சத்திரங்களாக மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் களமிறங்கினர். கால்பந்தில் அவர்களின் தாக்கம் இன்னும் அளவிட முடியாததாகவே உள்ளது. அவர்கள் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியும், அடிக்கும் ஒவ்வொரு கோலும், ரசிகர்களின் கவனத்தை உலகம் முழுவதும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

மெஸ்சியைப் பொறுத்தவரை, அவரது சர்வதேச வாழ்க்கையை நீண்ட காலம் துரத்திய அழுத்தம் ஏற்கெனவே முடிவுக்கு வந்துவிட்டது. 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை சாம்பியனாக்கி, தனது வாழ்க்கையின் மகுடத்தில் இல்லாத ஒரே பெரிய சாதனையையும் அவர், நிறைவேற்றினார். இதனால் 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரானது மெஸ்ஸி தன்னை நிரூபிப்பதற்காக அல்ல, ஏற்கெனவே வரலாற்றில் நிலைத்திருக்கும் தனது மகத்தான பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்துவதற்காகவே இருக்கும்.

ரொனால்டோவின் கதை சற்று வித்தியாசமானது. போர்ச்சுகலின் அதிக கோல்கள் அடித்த வீரராகத் திகழும் அவர், ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். 6-வது உலகக் கோப்பையில் பங்கேற்பது ஒரு புதிய சாதனையாக இருக்கும். அதே நேரத்தில், உலகக் கோப்பையை வெல்லும் தனது இறுதி வாய்ப்பாகவும் அது அமையலாம்.

மெஸ்சியும் ரொனால்டோவும் இணைந்து ஒரு முழு காலத்தை வரையறுத்தவர்கள். அவர்களின் போட்டி உலகக் கால்பந்தின் தரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. யார் சிறந்தவர் என்ற விவாதம் ஆண்டுகள் முழுவதும் நீடித்தாலும், உண்மையில் ரசிகர்கள் பெற்ற மிகப் பெரிய அதிர்ஷ்டம் இந்த இரு ஜாம்பவான்களையும் ஒரே காலகட்டத்தில் பார்த்ததுதான்.

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை, இந்த இரு நாயகர்களையும் கடைசியாக உலக அரங்கில் ஒன்றாகக் காணும் வாய்ப்பாக இருக்கலாம். அவர்கள் கோப்பையை வென்றாலும், முக்கிய கோல்களை அடித்தாலும், அல்லது அடுத்த தலைமுறையை ஊக்குவித்தாலும், அவர்களின் இருப்பு மட்டுமே இந்தத் தொடருக்கு ஒரு தனித்துவமான உணர்வை வழங்கும்.

இறுதி அத்தியாயத்தை நோக்கி மெஸ்ஸியும் ரொனால்டோவும்!
பிஃபா டிராபியின் மதிப்பு முதல் சாம்பியனுக்கு ரூ.478 கோடி பரிசு வரை | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in