FIFA WC 2026: கடும் டிக்கெட் விலையுடன் அதிக ரயில் கட்டணங்கள் - ரசிகர்களின் பர்ஸ் காலி?

FIFA WC 2026: கடும் டிக்கெட் விலையுடன் அதிக ரயில் கட்டணங்கள் - ரசிகர்களின் பர்ஸ் காலி?
Updated on
2 min read

2026 கால்பந்து உலகக் கோப்பைத் திருவிழா ஜூன் 11-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளால் இணைந்த தொடராக நடத்தப்படுகிறது. இந்த முறை 48 அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விலைகள் வானுயரத்தை எட்டி விட்டதாகவும், இதோடு கால்பந்து நடைபெறும் மைதானங்களுக்குச் செல்லும் ரயில் பயணங்களுக்கான டிக்கெட் கட்டணங்களும் 12 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கால்பந்து வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாக தகவல். இறுதிப் போட்டிக்கான டிக்கெட் கட்டணங்கள் அதிகாரபூர்வ தளங்களில் 8,680 டாலர்கள் முதல் 10,990 டாலர்கள் வரை விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவை டாப் கேட்டகரி இருக்கைகளுக்கானது. முதல் போட்டி டாப் கேட்டகரி இருக்கைகளுக்கான கட்டணம் 5,000 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.

டைனமிக் விலை நிர்ணய மாடல் என்று சொல்லப்படும், தேவைக்கேற்ப விலையை நிர்ணயிக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஏற்கெனவே உயர் கிராக்கி இருப்பதனால் இரண்டாம் கட்ட விற்பனை நடைமேடைகளில் டிக்கெட் கட்டணங்கள் கண்டபடி உயர்ந்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க நகரங்களான லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க் நகரப் போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணங்கள் சரேலென உயர்ந்து வருகின்றன.

12 மடங்கு உயரும் ரயில் கட்டணங்கள்: நியூயார்க் நகரத்திலிருந்து மெட்லைஃப் ஸ்டேடியத்திற்குச் செல்ல முயற்சிக்கும் ரசிகர்கள், ஒவ்வொரு போட்டிக்கும் சென்று வருவதற்கான ரயில் கட்டணமாக 150 டாலர் செலுத்த வேண்டியிருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினர். இது, மன்ஹாட்டனின் பென் ஸ்டேஷனிலிருந்து நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் உள்ள மைதானத்திற்கு, சுமார் 15 நிமிடங்கள் ஆகும் 9 மைல் பயணத்திற்கான வழக்கமான கட்டணமான 12.90 டாலரை காட்டிலும் கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகம்.

பெரும்பாலான ரசிகர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 40,000 ரசிகர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் என நியூ ஜெர்சி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஜூலை 19 அன்று நடைபெறும் தொடரின் இறுதி ஆட்டம் உட்பட எட்டு உலகக் கோப்பை ஆட்டங்கள் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. கால்பந்தாட்டத்தில் வல்லமைமிக்க பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கும், பிற நாடுகளுக்குமான குழுநிலை ஆட்டங்கள் ஜூன் 13 அன்று தொடங்குகின்றன.

1994-க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை அமெரிக்காவிற்குத் திரும்புவதையொட்டி, அதனை நடத்துவதற்கான செலவை ஈடுகட்ட இந்தக் கூடுதல் கட்டணம் அவசியம் என நியூ ஜெர்சி அதிகாரிகள் இந்த கட்டண உயர்வுகளை நியாயப்படுத்துகின்றனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் மிக்கி ஷெரில், சர்வதேச கால்பந்தாட்டத்தின் நிர்வாக அமைப்பான ஃபிபா, போக்குவரத்துச் செலவுகளை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

“அவ்வாறு செய்யாவிட்டால், ஒவ்வொரு நாளும் நியு ஜெர்சி போக்குவரத்தை நம்பியிருக்கும் நியூ ஜெர்சி மக்களின் முதுகில் உலகக் கோப்பை டிக்கெட் சுமையை ஏற்றி வைத்திருப்பவர்களுக்கு நாங்கள் மானியம் வழங்க மாட்டோம்” என்று அவர் ஓர் அறிக்கையில் எச்சரித்துள்ளார். ஆனால் ஃபிபா இதனை ஏற்குமா என்று தெரியவில்லை. உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும் மற்ற நகரங்களான லாஸ் ஏஞ்சலஸ், டல்லாஸ், ஹூஸ்டனில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லையே? என்று ஃபிபா கேள்வி எழுப்பியுள்ளது. மொத்தத்தில் இந்த கால்பந்து உலகக் கோப்பை அமெரிக்க, மெக்சிகோ, கனடா ரசிகர்களின் பர்ஸ்களைக் காலி செய்து விடும் என்று அஞ்சப்படுகிறது.

FIFA WC 2026: கடும் டிக்கெட் விலையுடன் அதிக ரயில் கட்டணங்கள் - ரசிகர்களின் பர்ஸ் காலி?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in