

டல்லாஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின், போர்ச்சுகல் அணியை எதிர்த்து விளையாடியது. முதல் 20 நிமிடங்களில் ஸ்பெயின் அணி 59 சதவீதம் பந்தை தனதுகட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
3 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்தது. இதில், மிக்கெல் ஒயார்சபால், அலெக்ஸ் ஃபேனா ஆகியோரின் கோல் அடிக்கும் முயற்சிகளை போர்ச்சுகல் கோல்கீப்பர் டியாகோ கோஸ்டா சிறப்பாக தடுத்தார். 37-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ஜோவோ பெலிக்ஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களது கோல் அடிக்கும் முயற்சிகளை ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் உனாய் சிமோன் சுவர்போல நின்று தடுத்தார். 42-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நுனோ மெண்டிஸ் அடித்த பந்து ஸ்பெயின் கோல் போஸ்ட் மீது பட்டு திரும்பியது.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தேரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 56-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் முக்கிய தற்காப்பு வீரரான நுனோ மெண்டிஸ் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக நெல்சன் செமெடோ களம் இறக்கப்பட்டார். இது அணியின் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 75-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் வீரர் ரஃபேல் லியோ சாதுரியமாக பந்தை கடத்தி சென்று பெனால்டி பாக்ஸ் பகுதிக்குள் இருந்த புருனோ பெர்னாண்டஸுக்கு கோல் அடிப்பதற்கான அருமையான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக போர்ச்சுகல் அணியால் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 0-0 என்ற நிலையிலேயே இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் 90+1-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஃபேபியன் ரூயிஸ் பந்தை அற்புதமாகக் கடத்தி ஃபெரான் டோரஸிடம் கொடுக்க, அதை அவர் துல்லியமாக மைக்கேல் மெரினோவுக்கு கடத்தினார்.
போர்ச்சுகல் கோல் கீப்பர் டியாகோ கோஸ்டாவுக்கு எதிராக ஒன்-டூ-ஒன் நிலையில் இருந்த மைக்கேல் மெரினோ சிறிதும் பதற்றமில்லாமல் பந்தை கோல்வலையின் வலது கார்னருக்குள் திணித்தார். இதுவே ஸ்பெயின் அணியின் வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. வரும் 11-ம் தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டதில் பெல்ஜியம் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ஸ்பெயின்.
ரொனால்டோ ‘குட்பை’
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் அணிக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இந்த போட்டியுடன் போர்ச்சுகல் அணியின் நட்சத்திரமான 41 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். நடப்பு தொடரில் ரொனால்டோ 5 ஆட்டங்களில் விளையாடி 3 கோல்களை அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக அவர், 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று 25 ஆட்டங்களில் 11 கோல்கள் அடித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து அரங்கில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பை ஆகியவற்றில் போர்ச்சுகல் அணிக்காக சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 6 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய போதிலும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் விடைபெற்றுள்ளார்.