

மியாமி கார்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவின் மியாமி கார்டனில் நாளை (19-ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது மற்றும் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிரான்ஸ் அணி அரை இறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடமும், இங்கிலாந்து தனது அரை இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவிடமும் தோல்வி கண்டிருந்தன. 3-வது இடத்துக்கான ஆட்டம் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியை முந்தி ‘தங்கக் காலணி’ விருதை வெல்வதற்கு பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பேவுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடப்பு தொடரில் இருவருமே தலா 8 கோல்களை அடித்துள்ளனர். அதே வேளையில், தலா 6 கோல்கள் அடித்துள்ள இங்கிலாந்து அணியின் ஹாரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோரும் இந்த விருதுக்கான பந்தயத்தில் தொடர்கின்றனர். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 1958-ல் மேற்கு ஜெர்மனிக்கு எதிராகவும், 1986-ல் பெல்ஜியத்துக்கு எதிராகவும் விளையாடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தது பிரான்ஸ் அணி. அதேவேளையில் 1982-ல் போலந்திடம் தோற்று பதக்கத்தை தவறவிட்டது.
மறுபுறம், இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்துக்காக விளையாடுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1990-ல் இத்தாலியிடமும், 2018-ல் பெல்ஜியத்திடமும் இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மூன்று போட்டிகள் உலகக்கோப்பையில் நடந்துள்ளன. 1966-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் ரோஜர் ஹண்ட் அடித்த இரண்டு கோல்களின் மூலம் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து 1982-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றிலும் பிரையன் ராப்சனின் இரண்டு கோல்கள் மற்றும் பால் மரினரின் ஒரு கோல் உதவியுடன் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் மீண்டும் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மோதல் 2022-ம் கத்தார் உலகக்கோப்பையின் கால்இறுதியில் நிகழ்ந்தது.
அப்போது பிரான்ஸ் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் பிரான்ஸ் அணிக்காக ஆரெலியன் சுவாமேனி மற்றும் ஒலிவியே ஜிரூ ஆகியோர் கோல் அடிக்க, இங்கிலாந்து அணிக்கு ஹாரி கேன் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். எனினும், அதற்குப் பிறகு கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை ஹாரி கேன் தவறவிட்டிருந்தார். இந்த தோல்விக்கு தற்போதைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி முயற்சிக்கக்கூடும்.