

நியூ ஜெர்சி: 48 அணிகள் பங்கேற்ற 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டி நேற்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்றது.
உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும், 2010-க்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின. தொடக்க விசில் ஒலித்த தருணம் முதலே ஸ்பெயின் தனது அடையாளமான பந்துக் கட்டுப்பாட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நடுகளத்தை முழுமையாக ஆக்கிரமித்த அந்த அணி, குறுகிய பாஸ்கள் மற்றும் வேகமான நகர்வுகள் மூலம் அர்ஜெண்டினா அணியின் டிஃபென்ஸை தொடர்ந்து சோதித்தது.
முதல் பாதியில் ஸ்பெயின் பலமுறை கோலுக்கு அருகே சென்றது. லாமின் யமால், நிக்கோ வில்லியம்ஸ், பெட்ரி ஆகியோரின் வேகமான இணை ஆட்டம் அர்ஜெண்டினா டிஃபென்ஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அபாரமான சேவ்களை நிகழ்த்தி, ஸ்பெயினின் முயற்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக தடுத்தார்.
மறுபுறம் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா எதிர்தாக்குதல்களை முன்னெடுத்தாலும், இறுதிக்கட்டத்தில் துல்லியம் இல்லாததால் கோல் வாய்ப்புகள் உருவாகவில்லை. முதல் பாதி ஆட்டம் 0-0 என கோல்களின்றி இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஸ்பெயினின் ஆதிக்கம் தொடர்ந்தது. அர்ஜெண்டினா வீரர்கள் தங்களது பகுதியில் நெருக்கமாக நின்று டிஃபென்ஸை பலப்படுத்தினர். இதனால் பலமுறை ஃபவுல்களும் இடைநிறுத்தங்களும் அதிகரித்தன.
90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+3-வது நிமிடத்தில் ஸ்பெயினின் தற்காப்பு வீரர் பாவு குபார்சியை பின்னால் இருந்து தேவையின்றி ஃபவுல் செய்ததற்காக அர்ஜெண்டினா அணியின் என்ஸோ ஃபெர்னாண்டஸுக்கு நடுவர் இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டினார். 2-வது மஞ்சள் அட்டை என்பது ரெட் கார்டுக்கு இணையானது என்பதால் என்ஸோ ஃபெர்னாண்டஸ் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அர்ஜெண்டினா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
வழக்கமான நேரத்தில் கோல் அடிக்கப்படாததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 96-வது நிமிடத்தில் லாமின் யமால் பந்தை மிக்கேல் மெரினோவிடம் அனுப்ப அவர், அர்ஜெண்டினா வீரர் ஒட்டமெண்டியின் தடையைத் தாண்டி அடித்த ஷாட்டை கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் தடுத்து நிறுத்தினார். அவர், மீது பட்டு திரும்பிய பந்தை நிக்கோ வில்லியம்ஸ் எளிதாக கோல் வளைக்குள் தள்ளினார். ஆனால், ஒட்டமெண்டியை மிக்கேல் மெரினோ ஃபவுல் செய்ததாக இந்த கோல் மறுக்கப்பட்டது.
106-வது நிமிடத்தில் உருவான வேகமான தாக்குதலில் ஸ்பெயின் அணி வலதுபுறத்தில் பந்தை அழகாகக் கடத்திவர போரோ அடித்த கிராஸை பின்பக்கத்தில் இருந்த பெற்ற நிக்கோ வில்லியம்ஸ் தலையால் முட்டி பாக்ஸ் பகுதிக்குள் அனுப்பினார். அங்கு துள்ளி வந்த பந்தை மாற்று வீரராக களமிறங்கிய ஃபெர்ரான் டோரஸ் தனது இடது காலால் கோல் வலைக்குள் திணித்தார்.
இதனால் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 113-வது நிமிடத்தில் லாமின் யமாலிடம் இருந்து பந்தை பெற்ற ஃபெர்ரான் டோரஸ் கோல் அடித்தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. ஆட்டத்தின் பெரும்பகுதியில் தாக்குதலில் தடுமாறிய அர்ஜெண்டினா, 115-வது நிமிடத்தில்தான் இலக்கை நோக்கி பந்தை அடித்தது. லயோனல் மெஸ்ஸி கார்னரில் இருந்து பாக்ஸ் பகுதிக்குள் உதைத்த பந்து அதிர்ஷ்டவசமாக மாற்று வீரராகக் களம் புகுந்த ஜூலியானோ சிமியோனியை நோக்கி எகிறி வந்தது. ஆனால் அவர், அதை அடித்தபோது பந்து கோல் போஸ்ட்டின் மேலாக உயரே பறந்து சென்றது.
120+1-வது நிமிடத்திலும் அர்ஜெண்டினா அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி 16 வருடங்களுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக வாகை சூடியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டும் ஸ்பெயின் அணி கோப்பையை வென்றிருந்தது.
தொடர்ச்சியாக 2-வது உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இருந்த லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியினர் கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினர். உலகக் கோப்பை தொடரில் கடந்த 12 ஆட்டங்களில் லயோனல் மெஸ்ஸி கோல் அடிக்காமலோ அல்லது கோல் அடிக்க உதவி செய்யாமலோ இருந்தது இதுவே முதன்முறையாகும். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு சுமார் ரூ.428 கோடிபரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அர்ஜெண்டினா அணி சுமார் ரூ.325 கோடியை பரிசாக பெற்றது.
‘நான் மட்டும் அடிக்கவில்லை’
அர்ஜெண்டினா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த கோல் காரணமாக ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர், அடித்த முதல் கோலே அவரது வாழ்நாளின் மிகச் சிறந்த கோலாக அமைந்து ஸ்பெயின் அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளது. ஃபெர்ரான் டோரஸ் கூறும்போது,” இந்த கோலை நான் மட்டும் அடிக்கவில்லை, ஸ்பெயினின் 4.7 கோடி மக்களும் சேர்ந்துதான் அடித்தோம்” என்றார்.
கோல் வாங்காமல் சாதனை
உலகக் கோப்பை தொடரில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஸ்பெயின் அணி அசத்தி உள்ளது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அந்த அணி 8 போட்டிகளில் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிரணி அடிக்க அனுமதித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றிலேயே சாம்பியன் பட்டம் வென்ற அணி ஒன்று மிகக் குறைந்த கோல்களை மட்டுமே வாங்கிய புதிய சாதனையைப் படைத்துள்ளது ஸ்பெயின் அணி.
65 வயதில் சாதனை
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 65 வயதான லூயிஸ் டி லா ஃபியூண்டே பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். இதன் மூலம் ஒரு அணியை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்துக்கு வழிநடத்திய அதிக வயதுடைய பயிற்சியாளர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் ஃபியூண்டே.
38-ல் தோல்வி இல்லை
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்பெயின் அணி கடைசியாக விளையாடிய 38 போட்டிகளில் (29 வெற்றிகள், 9 டிராக்கள்) தோல்வியே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது. இதன் மூலம் எந்தவொரு ஐரோப்பிய ஆடவர் அணியும் செய்யாத மிக நீண்ட தொடர் தோல்வியற்ற சாதனையைத் தனதாக்கியுள்ளது.
இதற்கு முன், இத்தாலி அணி 2018-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரை தொடர்ச்சியாக 37 போட்டிகளில் (28 வெற்றிகள், 9 டிராக்கள்) தோல்வியடையாமல் இருந்ததே சாதனையாக இருந்தது. இத்தாலி அணியின் அந்த சாதனைப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய சாதனையை படைத்துள்ளது ஸ்பெயின் அணி.
மெஸ்ஸியாலும் முடியல...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்பெயின் அணியை யாராலும் வீழ்த்த முடியவில்லை. தற்போது அர்ஜெண்டினா அணியின் நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸியால் கூட முடியாமல் போனது. உலகக் கோப்பை தொடர் முழுவதும் ஆட்டத்தின் கடைசி தருணங்களில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வெற்றி பெறுவதில் மன்னர்களாகத் திகழ்ந்த அர்ஜெண்டினா அணியால் ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஸ்பெயின் அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல் போனது துரதிருஷ்டமே.
‘கோல்டன் பூட்’
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் பூட்’ விருதை பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே பெற்றார். அவர், மொத்தம் 10 கோல்களை பதிவு செய்தார். மேலும் 4 முறை கோல் அடிக்க சக அணி வீரர்களுக்கு உதவியும் செய்திருந்தார்.
கோல்டன் பூட் விருதை கிலியன் எம்பாப்பே தொடர்ச்சியாக 2-வது முறையாக வென்றுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு தொடரிலும் அவர், கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார்.அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 8 கோல்களும், இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம், நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் தலா 7 கோல்களும் பதிவு செய்து அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
‘கோல்டன் பால்’
ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி, தொடரின் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதை வென்றார். அவர், இந்தத் தொடரில் மொத்தம் 799 பாஸ்களை மேற்கொண்டிருந்தார். இந்த பிரிவில் 2-வது இடத்தை ஸ்பெயினை சேர்ந்த பவ் குபெர்சியும் (690), 3-வது இடத்தை ஐமெரிக் லபோர்ட்டும் (660) பிடித்தனர்.
‘கோல்டன் கையுறை’
ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் உனாய் சிமோன் கோல்டன் கையுறை விருதை வென்றார். அவர், இந்த தொடரில் 8 ஆட்டங்களில் ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 19 வயதாகும் பவ் குபெர்சி வென்றார்.
11 முறை தடுத்து சாதனை
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக இலக்கை நோக்கி அடித்த 20 ஷாட்களுக்குப் பிறகே, அர்ஜெண்டினா அணியால் அதுவும் 115-வது நிமிடத்தில்தான் இலக்கை நோக்கி தனது முதல் ஷாட்டை அடிக்க முடிந்தது. ஸ்பெயின் அணி ஆட்டத்தின் முதல் 10 கார்னர் கிக்குகளில் 9-ல் ஆதிக்கம் செலுத்தியது.
இருப்பினும், அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றிலேயே சாதனையாக 11 முறை ஸ்பெயின் அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை தகர்த்தெறிந்தார்.
308 கோல்கள்
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தின இந்த தொடரில் 48 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. மொத்தம் நடைபெற்ற 104 போட்டிகளில் ஒரு போட்டிக்கு சராசரியாக 3 கோல்கள் வீதம், 308 கோல்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பையில் 64 போட்டிகளில் 172 கோல்கள் அடிக்கப்பட்டிருந்தன.
ஸ்பெயினின் தந்திரம்
உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. பந்தின் கட்டுப்பாட்டை முழுமையாக தங்கள் வசம் வைத்துக்கொண்டு, எதிரணிக்கு சிறிய வாய்ப்புகூட வழங்காத ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கம் முதல் இறுதி வரை அதே தந்திரத்தை சிறப்பாக செயல்படுத்திய ஸ்பெயின், உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி உள்ளது.