

சென்னை: அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்ற நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்துள்ளது. இதில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், அடுத்த உலகக் கோப்பை தொடர் (2030) எங்கு, எப்போது நடைபெற உள்ளது என்பதை பார்ப்போம்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளை சேர்ந்த கால்பந்து அணிகள் பட்டம் வெல்ல கடுமையாக போட்டி போடும். நடப்பு தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்றது. அந்த அணிக்கான வெற்றி கோலை ஃபெர்ரான் டோரஸ் பதிவு செய்தார். இதன் மூலம் அந்த அணியின் 16 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
23-வது ஃபிபா உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு பரிசு தொகையாக ரூ.478 கோடி பெற்றுள்ளது.
அடுத்த உலகக் கோப்பை தொடர் எங்கு, எப்போது?
அடுத்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2030-ல் நடைபெறுகிறது. இந்த தொடரிலும் 48 அணிகள் பங்கேற்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஃபிபா உலகக் கோப்பை தொடரின் 100-வது ஆண்டாக அமைகிறது. அதற்கு தகுந்தபடி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஃபிபா ஒருங்கிணைக்கும். இந்த தொடரில் 2030-ல் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் உலகக் கோப்பை தொடர் கடந்த 1930-ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
2030-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் மொராக்கோவில் நடைபெற உள்ளது. இதோடு உருகுவே, பராகுவே மற்றும் அர்ஜெண்டினாவில் இந்த தொடரில் மூன்று ஆட்டங்கள் நடைபெறும் என தகவல்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா, மாட்ரிட் நகரம், போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன், மொராக்கோவில் உள்ள காசாபிளாங்கா நகரம் என சுமார் 15-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 20 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.