

மியாமி: ஸ்காட்லாந்துடனான ஆட்டத்தில் நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கினார் பிரேசில் வீரர் நெய்மர் ஜூனியர். 981 நாட்களுக்குப் பின்னர் களமிறங்கியதால் மைதானத்திலேயே அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
மியாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நேற்றைய ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் மத்தேயஸ் குன்ஹாவுக்குப் பதிலாக, நெய்மர் ஜூனியர் களமிறக்கப்பட்டார். அவரைப் பார்த்த பிரேசில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றதும் உணர்ச்சிப் பெருக்கால் மைதானத்திலேயே நெய்மர் கண்ணீர்விட்டு அழுதார். அவர் கடைசியாக 2023-ம் ஆண்டு அக்டோபரில் தேசிய அணிக்காக விளையாடியிருந்தார். இந்நிலையில், சுமார் 3 ஆண்டு காலம் (981 நாட்கள்) கழித்து அவர் மைதானத்தில் களம்புகுந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிகரமான நாட்களில் இதுவும் ஒன்று. இதை என்னால் மறக்கமுடியாது” என்றார்.
மேலும், இந்த உலகக் கோப்பையில் பங்கேற்று விளையாடியதால் தொடர்ந்து நான்கு உலகக் கோப்பைத் தொடர்களில் (2014, 2018, 2022, 2026) விளையாடிய வீரர்களின் பட்டியலில் நெய்மரும் இணைந்துள்ளார். 34 வயதாகும் நெய்மர், பிரேசில் அணிக்காக இதுவரை 129 போட்டிகளில் விளையாடி 79 கோல்களுடன், அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார்.